பொதுவாக மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மல்லிகை பூவும், மீனாட்சி அம்மன் கோவிலும் தான். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் தெப்பத்திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான தெப்பத் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, காலை மற்றும் இரவு என்று இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
இந்த விழாவில் மிக முக்கியமான நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவிற்காக மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் கோவில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளத்தை சென்றடைந்து, அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்கள்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர், பக்தர்கள் தெப்பத்தை வடம் பிடித்து இழுத்து காலை 11 மணிக்கு தெப்பம் குளத்தை வலம் வந்தது.
அதன் பிறகு சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளினார்கள். மேலும், மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று இரவு மீண்டும் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்கள்.
இதைத்தொடர்ந்து, தெப்பத்தை சுவாமி சுற்றிய பிறகு மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலும், சுந்தரேசுவரர் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளித்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.