தூத்துக்குடி மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவரை பாட்டிலால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஜமீன் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் டிராக்டர் டிரைவர் ராமசாமியும் (30), இதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிச்சாமியும், நேற்று ஜமீன் தேவர்குளம் பகுதியில் உறவினர்வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.
அப்பொழுது மதுபோதையில் ராமசாமிக்கும், மாரிசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மாரிசாமி, அருகே கிடந்த பாட்டிலை எடுத்து ராமசாமியை குத்தி உள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த ராமசாமியை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நாலாட்டின்புதூர் போலீசார் மாரிச்சாமியை கைது செய்தனர்.