ஆயுள் காப்பீட்டு பாலிசியை குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களின் பெயர்களில் எடுக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் இல்லாத போது தடைபடும் வருமான இழப்பை குடும்ப உறுப்பினர்களால் சமாளிக்க முடியும்.. இதை பற்றி முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். இப்போது மருத்துவக் காப்பீடு எவ்வளவு எடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு…!
மருத்துவக் காப்பீட்டை (Health Insurance) குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுக்க வேண்டும். காரணம், யாருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவு ஏற்பட்டாலும் குடும்பத்தின் நிதி நிலை பாதிக்கப்படும்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு குரூப் காப்பீட்டின் கீழ் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொடுக்கப்படுகிறது. இந்த பாலிசியின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்துக்கொள்ள முடியும்.
தனிப்பட்ட பாலிசி..!
காப்பீட்டுத் தொகை தனியார் நிறுவனங்களில் குறைவாக இருக்கும்பட்சத்தில் தனியே தனக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எடுத்துக்கொள்வது அவசியமாகும். உதாரணத்துக்கு அலுவலகத்தில் வழங்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்து ரூ. 1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம்தான் கவரேஜ் இருக்கிறது என்றால் தனிப்பட்ட முறையில் கூடுதல் தொகைக்கு பாலிசி எடுத்து வைத்துக் கொள்வது கட்டாயமாகும்.

காரணம், மருத்துவமனை செலவுகள் மிகவும் அதிகரித்துள்ள தற்போதைய நிலையில் இந்தக் குறைவான கவரேஜ் போதுமானதாக இருக்காது. அடுத்து நிறுவனத்தில் பணியில் இருக்கும் வரைக்கும்தான் இந்த பாலிசி நடைமுறையில் இருக்கும். வேறு நிறுவனத்துக்கு பணி மாறும் போது இடைப்பட்ட காலத்தில் மருத்துவக் காப்பீடு இல்லாத நிலையில் மருத்துவச் சிகிச்சை எடுக்க வேண்டி வந்தால், கையிலிருந்து பெரும் தொகை போட வேண்டி வரும்.
மருத்துவக் காப்பீட்டில் காத்திருப்பு காலம்..!
மருத்துவக் காப்பீட்டில் குரூப் பாலிசியில் மட்டும்தான் அனைத்து செலவுகளுக்குமான கவரேஜ் பாலிசி எடுத்த தேதியிலிருந்து ஆரம்பிக்கும். மேலும், மருத்துவ பரிசோதனை இருக்காது. காரணம், ஆயிரக்கணக்கானவர்கள் இந்த குரூப் பாலிசிகளில் இணைக்கப்பட்டிருப்பதாகும்.
தனிப்பட்ட முறையில் ஹெல்த் பாலிசி எடுக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு அதன் பிறகே பாலிசி வழங்கப்படும். சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் பாலிசிக்கான பிரீமியம் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் அல்லது பாலிசி நிராகரிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட பிரீமியம் திருப்பித் தரப்படலாம். பாலிசி நிராகரிக்கப்பட்டால் உடல் நலனை சரி செய்து ஆறு மாதம் கழித்து பாலிசி எடுக்க விண்ணப்பிக்கலாம்.
மருத்துவக் காப்பீடு பாலிசிகளில் ஏற்கனவே இருக்கும் நோய் பாதிப்புக்கு எடுக்கும் சிகிச்சைக்கு 2 முதல் 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்த ஆண்டுகள் காப்பீடு நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.

பணமில்லா முறை
மருத்துவக் காப்பீடு பாலிசியில் சிகிச்சைக்காக பணமில்லா (Cashless) அல்லது ரீ இம்பிரஸ்மென்ட் முறையில் இழப்பீடு பெற முடியும். சிகிச்சைக்காக பணமில்லா வசதி கொண்ட மருத்துவமனையில் சேரப் போகிறீர்கள் என்றால் முதலில் மருத்துவமனையில் இதற்கென இருக்கும் பிரிவில் தெரிவிக்க வேண்டும். அவர்கள் டி.பி.ஏ-க்கு மெயில் மூலம் தகவல் அனுப்பி, சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு அனுமதி பெற்றுத் தருவார்கள். அனுமதி கிடைத்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெறும். சிகிச்சை முடிந்ததும், மொத்தச் செலவுகளுக்கான ரசீதுகள் டி.பி.ஏ-க்கு அனுப்பப்படும். அவர்கள் க்ளெய்ம் தொகையை மருத்துவமனைக்கு கொடுப்பார்கள்.
ரீ இம்பிரஸ்மென்ட் முறை
கையிலிருந்து செலவு செய்துவிட்டு பின்னர் இழப்பீடு பெறுவது ரீ இம்பிரஸ்மென்ட் முறை ஆகும். இந்த முறையில் முதலில் காப்பீடு நிறுவனம் மற்றும் டி.பி.ஏ-க்கு தெரிவிக்க வேண்டும். அவர்களின் அனுமதி கிடைத்ததும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் எழுதி கொடுத்த சீட்டுகள், செலவுக்கான ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சிகிச்சைக்கான மருத்துவமனை செலவை கட்டினால், வீட்டுக்கு வந்துவிடலாம். இதன் பிறகு டி.பி.ஏ-க்கு இழப்பீடு கோரி விண்ணபிக்க வேண்டும். ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு பாலிசிதாருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

நிறுவனர்,
www.gururamfinancialservices.com
காப்பீடு எடுக்கும்போது புகைப் பிடித்தல், மதுப்பழக்கம் போன்ற பழக்கங்கள், அப்பா, அம்மாவுக்கு இருதய பாதிப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருந்தால் அவற்றை மறைக்க கூடாது. அப்படி மறைத்து பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில் பின்னர் இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது. .
எவ்வளவுக்கு எவ்வளவு இளம் வயதில் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கப்படுகிறதோ அவ்வளவு சுலபமாக பாலிசி கிடைக்கும். திருமணம் ஆனவுடன் மனைவி/கணவரை பாலிசியில் சேர்த்துக்கொள்ளலாம். இதேபோல் பிள்ளை பிறந்த உடன் அதனையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது கவரேஜ் தொகையையும் அதிகரிப்பது அவசியமாகும்.
நடுத்தர வயதாகும் போது கவரேஜ் தொகையை அதிகரிப்பது கட்டாயமாகும். காரணம், அந்தக் காலக் கட்டத்தில் நோய் பாதிப்புகள் அதிகரித்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். 60 வயதாகும் போது மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு பாலிசியை எடுத்துகொள்ள வேண்டும்.
க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் 90-க்கு மேல் இருக்கும் நிறுவனத்தில் பாலிசி எடுப்பது நல்லது. குடும்பத்தில் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.