மும்பை: குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சாம்யா மன்சூரி. 18 வயதாகும் இப்பெண்ணுக்கு பிறப்பிலேயே வலது கை கிடையாது. இந்நிலையில் மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனை அப்பெண்ணுக்கு நாட்டிலேயே முதல்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கையை பொருத்தி வெற்றிபெற்றுள்ளது.
இதுகுறித்து சாம்யா கூறும்போது “எனக்கு கை பொருத்தப்பட உள்ளதாக தகவல் வந்ததில் இருந்து, வாகனம் ஓட்டுவது உட்பட புதிய கையால் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என என் மனதில் கனவுகள் ஓடத் தொங்கின” என்றார்.
தற்போது பிசிஏ படித்துவரும் சாம்யா அடுத்து எம்சிஏ படிக்க விரும்புகிறார். அதன் பிறகு காவல்துறை அதிகாரியாகி, சைபர் குற்றப் புலனாய்வு குழுவில் இடம்பெற விரும்புகிறார். சாம்யா மேலும் கூறும்போது, “கை இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொண்டேன். நான் சிறுமியாக இருந்தபோது, என் வகுப்புப் தோழிகள் கையில்லாத என்னை கிண்டல் செய்வார்கள். இதனால் பொது இடங்களுக்கு செல்வதை கூட தவிர்த்து வந்தேன். இப்போது, அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்” என்றார்.
சாம்யாவின் தாயார் ஷெனாஸ் மன்சூரி கூறும்போது, “இப்போது பூமியில் மிகவும் மகிழ்ச்சியான நபர் நானாகத்தான் இருப்பேன். கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் அவளுக்காக ஒரு கையை தேடிக்கொண்டிருந்தோம். ஆனால், 18 வயது நிரம்பிய பிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். சாம்யாவுக்கு ஜனவரி 10-ம் தேதி 18 வயது நிறைவடைந்ததால், மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்தனர். கை கிடைப்பது குறித்து எங்களுக்கு 6 நாட்களுக்கு முன் அழைப்பு வந்தது” என்றார்.
சாம்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நிலேஷ் சத்பாய் கூறும்போது, “சாம்யா பதிவு செய்த சில நாட்களில் எங்களுக்கு கொடையாளர் கிடைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு நிறைய ஆலோசனைகள் வழங் கப்பட்டன. அவரது தேவை மற்றும்நம்பிக்கையை கருத்தில்கொண்டு அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நாங்கள் முடிவு செய்தோம்” என்றார்.