விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றியல் மூழ்கி புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் மடுகரைப் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஆகாஷ்(18) அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாவாடை என்பவர் நேற்று அப்பகுதி மாணவர்கள் சிலரை திருவதிகை மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மதியம் விழுப்புரம் அருகே சின்னகள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஆகாஷ் மற்றும் சிலர் தென்பண்ணை ஆற்றில் குளித்தனர். அப்பொழுது விக்னேஷ் (12) என்ற ஏழாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கியுள்ளான். இதைப் பார்த்து ஆகாஷ் சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஆகாஷ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் சிறுவன் விக்னேஷ் பாதுகாப்பாக கரைக்கு வந்துள்ளான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.