அது ஒரு மிஸ்டுகால் கட்சிங்க: மீண்டும் பாஜக மீது பாய்ந்த செந்தில் பாலாஜி

பாஜகவையும், அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் ஒரு பிடி பிடித்து வருகிறார் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அண்ணாமலையும் ஆரம்பம் முதலே மற்ற அமைச்சர்களை விட அதிகமாக செந்தில் பாலாஜியை விமர்சித்து வருகிறார். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தான் இந்த ஏழாப் பொருத்தத்துக்கு காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் எதிர் தரப்பின் வியூகங்களை தவிடு பொடியாக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறாராம்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த ஒன்றரை ஆண்டுகால சாதனையால் கை சின்னம் மாபெரும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது ஒரு மாயை. அது தவறான கருத்து. இந்த கொங்கு மண்டலம் முதலமைச்சரின் கோட்டை. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஈரோடு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதும் தவறு. இது திமுகவின் எக்கு கோட்டை பொறுத்திருந்து பாருங்கள்.” என்று கூறினார்.

பாஜக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அவங்க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேளுங்கள். பாஜக ஒரு மிஸ்டு கால் பார்ட்டி. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதைப் போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் பல மடங்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் மாதம் தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

“மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை பொறுத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

விசைத்தறி இந்த பகுதியில் மிக அதிகமாக இருக்கிறது. அதிமுக கடந்த 10 ஆண்டு காலத்தில் மின் கட்டணம் ஏற்றாததை போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். 2010இல் இருந்த மின் கட்டணத்தை விட கூடுதலாக அதிமுக ஆட்சியில் 117 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. விசைத்தறிகளுக்கு அதிமுக ஆட்சியில் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு மகத்தான வெற்றியாக இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி அமையும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.