கடன் வாங்கி பணத்தை இழந்ததால் மன உளைச்சல் ஆன்லைன் ரம்மி விளையாடிய ஓட்டல் ஊழியர் தற்கொலை

மதுரை: சேலம் மாவட்டம், முலக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன்கள் குணசீலன் (26), பசுபதி மற்றும் கமல். மனைவி இறந்ததால் முத்துராமன், 2ம் திருமணம் செய்து கொண்டு தனியே சென்று விட்டார். இவரது 3 மகன்களையும் சேலம் அரிசிபாளையத்தில் உள்ள பாட்டி தமிழரசி வளர்த்து வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், குணசீலன், பசுபதி ஆகியோர் மதுரை வந்து ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். வேறு சிலருடன் சேர்ந்து யாகப்பா நகரில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.

ஆறு மாதங்களாக குணசீலன் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடி வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. விட்டதை பிடிக்கும் எண்ணத்தில்,  பலரிடம் கடன் வாங்கி தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. இதில், பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கவே குணசீலன் விரக்தியடைந்தார். வாங்கிய கடனை அடைக்கும்படி, ரூ.50 ஆயிரத்தை தம்பி பசுபதி கொடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை ஓட்டலில் இருந்து பசுபதியிடம் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு குணசீலன் சென்றுள்ளார். ஆனால் திரும்ப வேலைக்கு வரவில்லை. இரவில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள அறையில் குணசீலன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.