கர்நாடகா: 5 வாரங்களில் பிரதமரின் 3-வது ‘விசிட்’ – பல திட்டங்கள் தொடக்கம்!

கர்நாடக மாநிலத்தில் இன்னும், மூன்று மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ‘ஷெட்யூல்’ போட்டு கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகின்றனர்.

இதுவரை இருமுறை கர்நாடகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஏழு வார இடைவெளியில் இன்று, மூன்றாவது முறையாக கர்நாடக மாநிலம், பெங்களூரு, துமக்கூர் மாவட்டம் மற்றும் சில பகுதிகளுக்கு வந்து, பல திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இரண்டாவது முறை சுற்றுப்பயணம் வந்தபோது, 20,000 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார்.

பாலிஸ்டர் நூலில் தயாரித்த கோட்

தேசிய ஆற்றல் வாரத்தை முன்னிட்டு, பெங்களூரில் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள், 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சோலார் இரட்டை அடுப்பு, 30 ஆற்றல் சம்பந்தமான நிறுவனப் பொருள்களைத் தொடங்கிவைத்தார்.

சோலார் அடுப்பு

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து பாலியஸ்டர் நூல் தயாரித்து, அதில் துணிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவைத்தார். இதேபோல், துமக்கூர் மாவட்டத்தில், Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்தில், ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும், மாபெரும் தயாரிப்புத் தொழிற்சாலையைத் தொடங்கிவைத்தார்.

வளர்ச்சிக்கான பட்ஜெட்…

நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி, ‘‘தற்போதைய பட்ஜெட் தனிநபரின் வருமானத்தை உறுதி செய்வதுடன், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிராமத்திலுள்ள மக்கள், இளைஞர்கள், தலித், பழங்குடியின மக்கள் என, அனைவருக்குமான பட்ஜெட். இதில், ஒவ்வொரு சமூக மக்களுக்கும், அரசு உதவி செய்வதை உறுதிசெய்திருக்கிறோம். அதேபோல், பா.ஜ.க தலைமையிலான ‘டபுள் இன்ஜின்’ அரசாங்கத்தால், மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்கிறது. கர்நாடகத்தின் ‘டபுள் இன்ஜின்’ அரசாங்கத்தால், நாட்டின் முதலீட்டாளர்களின் முதன்மை தேர்வாக கர்நாடகா மாறியிருக்கிறது.

கர்நாடகத்தில் பிரதமர் நரேந்திர மோடி

HAL நிறுவனத்தின்மீது தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, பா.ஜ.க மீதும் பொய்யான பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், நாடாளுமன்றத்தில் பல மணி நேரம் வீணாகியிருக்கிறது. HAL நிறுவனத்தின் வளர்ச்சி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்” என, காங்கிரஸ் பல ஆண்டுகளாக முன்வைத்து வரும் ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

‘தேர்தல் நெருங்குவதால், வளர்ச்சிப்பணிகள், பூமி பூஜைகள் தொடக்கம் என, கர்நாடக மாநிலத்தில் இனி பல முறை பிரதமர் நரேந்திர மோடியைப் பார்க்கலாம்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.