சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலா. இவர் எழுப்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து சென்றுள்ளார். இதைப்பார்த்த அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சியடைந்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கூவம் ஆற்றில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அந்த இளைஞர் தொடர்ந்து நீச்சல் அடித்து கொண்டே சென்றதால் மீட்பதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து, அந்த இளைஞர் சேறு நிறைந்த பகுதிகளில் நீச்சலடித்து சென்றுள்ளார். அதனால், அவரை தீயணைப்பு வீரர்களால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இளைஞர் நீச்சல் அடித்துக் கொண்டே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று இறுதியில் சிந்தாதிரிப்பேட்டை வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இளைஞர் வேலா குடி போதையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கூவம் ஆற்றில் நீச்சல் அடித்து கொண்டு முன்னேறும் இளைஞரை மீட்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.