இன்று அதிகாலை துருக்கி-சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியெண்டெட் மாகாணம் நுர்தாகி நகரில் அதிகாலை 4:17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று மாலை 3:54 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக மீண்டும் இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் 3000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய துருக்கியில் மீண்டும் ரிக்டர் அளவுகோலில் 6.0 நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் துருக்கியில் மட்டும் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், முன்னாள் பாஜக பிரமுகருமான நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் ”துருக்கி நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சரிந்தன. பல உயிர்கள் பலியாகின. ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு கடினமாக இருக்கும். நல்ல எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும் உலகை குணப்படுத்துவோம். துருக்கிக்காகு எனது பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.