டிரோன், செயற்கைக்கோள் ஆய்வகம்… அசத்தும் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி!

நாட்டிலேயே முதல்முறையாக, சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்காக டிரோன் மற்றும் செயற்கைக்கோள் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு நிகராக தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்தாண்டு நவம்பர் மாதம், `வானவில் மன்றம்’ என்ற அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோல் அனைத்து அரசு நடுநிலை, உயர்‌நிலை மற்றும்‌ மேல்‌நிலைப்‌ பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்க அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், பள்ளிகளில் 6 முதல்‌ 8 -ம்‌ வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள்‌ கற்பிக்கப்படும்‌ பாடங்களோடு தொடர்பான அறிவியல்‌ மற்றும்‌ கணிதப்‌ பரிசோதனைகள் செயல்முறைகளோடு விளக்கப்படும்.

பள்ளிக் குழந்தைகள் | மாதிரிப்படம்

இத்திட்டத்தின் கீழ் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், டிரோன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பப் பயிற்சிக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை சார்பில், ரூ.20 லட்சம் நன்கொடையில் இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத் திறப்புவிழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் நடந்த இந்த விழாவில் கலந்துகொண்டு, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் துணைத் தலைவரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாத்துரை ஆய்வகங்களைத் திறந்து வைத்தார்.

மயில்சாமி அண்ணாதுரை

இந்த நிகழ்வில், அரசுப் பள்ளி மாணவர்கள், டிரோன்களை இயக்கி, விருந்தினர்களுக்கு செயல்முறை விளக்கம் தந்தனர். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு, இந்த ஆய்வகத்தில் டிரோன் தொழில்நுட்பம், சிறுரக செயற்கைக்கோள் வடிவமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதேபோல், மேலும் 4 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வகத்தில் மாணவர்கள் தயாரித்த சிறு ரக ராக்கெட், டிரோன்களை பறக்கவிட்டு சோதித்து காண்பிக்கப்பட்டது. ராக்கெட் அறிவியல் குறித்த செய்முறை விளக்கம் மாணவர்களுக்குத் தரப்பட்டதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.