துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் 3,500 பேர் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயரும் பலி எண்ணிக்கை
மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் ஏற்படுத்திய பேரழிவால் பலியானோரின் எண்ணிக்கை 3,500ஐ எட்டியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் மக்கள் பலர் உதவிக்காக கெஞ்சுகின்றனர். சிலர் பேஸ்புக் நேரலையில் உதவி வேண்டியுள்ளனர்.
இந்த கோர சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெஞ்சை உலுக்குகின்றது.
உயிரிழந்த 3,500 பேரில் 2,316 பேர் துருக்கியிலும், 700க்கும் மேற்பட்டோர் சிரியாவிலும், 538 பேர் சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் பலியானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை
இதற்கிடையில், கடந்த 24 மணிநேரத்தில் 60க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் அதிர்வுகளை பதிவு செய்திருக்கும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நிலநடுக்கங்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 10,000 வரை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
துருக்கி, சிரியாவுக்கு உலகெங்கிலும் உள்ள நாடுகள் உதவிகளை வழங்கியுள்ளன. மேலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் அனைவரும் அவசரகால சேவைகளின் முயற்சிகளுக்கு உதவ விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் துருக்கியின் ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@AFP via Getty Images