துருக்கியில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் பூமிக்கு அடியில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவும் இடிந்து சேதமடைந்துள்ளன. இதன் தாக்கம் சிரியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் உறங்கி கொண்டிருந்தனர். இதன் காரணமாக உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கி நாட்டில் மட்டும் 53 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகள் இன்னும் அகற்றப்படாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சிரியாவில் 42 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
