நெல் கொள்முதல் விதிகளில் தளர்வு அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக, காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, நெல் கொள்முதல் விதிகளில் உரிய தளர்வுகளை அளிக்குமாறு பிரதமர்நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், நெல் கொள்முதல் விதிகளில் உரிய தளர்வுகளை வழங்க வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

4.19 லட்சம் ஹெக்டேர்

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் துரிதமாக தூர் வாரப்பட்டன. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பும் வழங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளால், நெல் சாகுபடிப் பரப்பு அதிகரித்து, குறுவைப் பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 16.43 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சம்பா, நவரை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரியில் அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பருவம் தவறி மழை பெய்தது. இதனால் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி, அறுவடைப் பணியை மீண்டும் தொடங்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இந்நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் குறுவை பருவத்தின்போது, பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், மாநில கொள்முதல் முகமையான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேண்டுகோள் அடிப்படையில், நெல் கொள்முதலில் ஈரப்பதத்தில் தளர்வு அளித்து மத்திய அரசு அனுமதியளித்தது.

அதேபோல, தற்போது பருவம் தவறி மழை பெய்துள்ளதால், கொள்முதல் ஈரப்பதத்தில் அதேபோன்ற தளர்வு தேவைப்படுகிறது. அதன் மூலம் நெல் கொள்முதல் பணிகளை சீராக மேற்கொள்ள இயலும். எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரையும், சேதமடைந்த, நிறமாற்றம் அடைந்த மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரையும் தளர்த்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.