துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (79) துபாயில் நேற்று காலமானார். அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படுகிறது.
1943 ஆகஸ்ட் 11-ல் டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். அவரது தாத்தா ஆங்கிலேயர் ஆட்சியில் வரி வசூல் அலுவலராகவும், அவரது தந்தை சையது அதிகாரியாகவும் பணியாற்றினர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது டெல்லியில் இருந்து கராச்சிக்கு முஷாரப் குடும்பம் இடம்பெயர்ந்தது.
லாகூர் பார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்ற முஷாரப், பின்னர் இங்கிலாந்து ஸ்வின்டனில் உள்ள பாதுகாப்புத் துறை கல்லூரியில் சேர்ந்தார். 1961-ல் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் சேர்ந்த முஷாரப், 3 ஆண்டு பயிற்சிக்குப் பின்னர், தனது 21-ம் வயதில் பாகிஸ்தான் ராணுவத்தில் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
1965-ல் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது, முஷாரப் முக்கியப் பங்கு வகித்தார். அந்தப் போரில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியபோதும், முஷாரப்பின் வீரத்துக்காக அவருக்கு சிறப்புப் பதக்கம் வழங்கப்பட்டது.
கார்கில் பகுதியில் ஊடுருவல்
1997-ல் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்று, அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். அவரது ஆட்சிக் காலத்தில், 1998-ல் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதியாக பர்வேஸ் முஷாரப் நியமிக்கப்பட்டார்.
அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் 1999 பிப்ரவரியில் பேருந்து மூலம் லாகூர் நகருக்குச் சென்றார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து வாஜ்பாய் நடத்திய பேச்சுவார்த்தை, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
இந்த சூழலில், முஷாரப் உத்தரவுப்படி 1999 மே மாதத்தில் காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ரகசியமாக ஊடுருவினர். அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்-க்கு தகவல் தெரிவிக்காமல், தனிப்பட்டமுறையில் கார்கில் பகுதியைக் கைப்பற்ற முயன்றார் முஷாரப். ஆனால், இந்திய ராணுவத்தின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவம் படுதோல்வியைத் தழுவியது.
ராணுவப் புரட்சி
இதனால் அதிருப்தியடைந்த நவாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி பதவியில் இருந்து முஷாரப்பை நீக்க ரகசிய ஆலோசனை நடத்தினார். அப்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த முஷாரப், உடனடியாக விமானத்தில் கராச்சி திரும்பினார். அப்போது அவரது விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த சூழலில், முஷாரப் உத்தரவுப்படி படைத் தளபதிகள் அசிஸ்கான், இஷான் உல் ஹக், முகமது ஆகியோர் நவாஸ் ஷெரீப்பை கைதுசெய்து, வீட்டுக் காவலில் வைத்தனர். ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முஷாரப், நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். பின்னர், நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட 40 பேர் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
2001 ஜூன் 21-ல் பாகிஸ்தானின் 10-வது அதிபராகப் பதவியேற்ற முஷாரப். அதே ஆண்டு ஜூலையில் இந்தியாவுக்கு வருகை புரிந்தார்.
2001-ல் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் மீது அல்-காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அமெரிக்காவுடன் அதிபர் முஷாரப் கைகோத்து, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பினார்.
2002-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சி வென்று, ஆட்சி அமைத்தது. இதன்மூலம் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ராணுவப் புரட்சி மற்றும் அவசரநிலை பிரகடனத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
2004-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டப்பேரவைகளில் முஷாரப் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அவர் வெற்றி பெற்றார். 2007-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரியை, அதிபர் முஷாரப் பதவி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதனால் முஷாரப், நாட்டில் அவசரநிலையை அமல் செய்தார். போராட்டம் தீவிரமடைந்ததால், 2007 நவம்பர் 3-ம் தேதி ராணுவ தலைமைத் தளபதி பதவியை ராஜினாமா செய்தார்.
2008-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 18-ல் அதிபர் பதவியை முஷாரப் ராஜினாமா செய்துவிட்டு, பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்
2010-ல் அகில பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற தனிக் கட்சியை முஷாரப் தொடங்கினார். இதனிடையே, முன்னாள் பிரதமர் பெனசிர் கொலை வழக்கு, தேசத்துரோக வழக்கு என அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2012-ல் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் பாகிஸ்தான் திரும்பினார். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதே ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர், இந்த தடை நீக்கப்பட்டது.
உடல்நிலையைக் காரணம் காட்டி வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசிடம் அவர் அனுமதி கோரினார். உரிய அனுமதி கிடைத்ததால், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகருக்குச் சென்ற முஷாரப், பின்னர் பாகிஸ்தான் திரும்பவில்லை. 2019 டிசம்பர் 17-ல் அவருக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம், தேசத் துரோக வழக்கில் மரணதண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இறுதிச் சடங்கு
துபாயில் தங்கியிருந்த முஷாரப், அமிலாய்டோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக துபாயில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முஷாரப் நேற்று காலமானார். அவரது உடலை பாகிஸ்தான் கொண்டுசென்று, இறுதிச் சடங்குகளை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக துபாயில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தனர். பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியிருப்பதால், இன்று துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முஷாரப் உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள், முஷாரப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.