பாட்னா: கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஹாரின் அமியவார் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 500 டன் இரும்பு பாலத்தை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து திருடிச் சென்றனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் பிஹாரின் கர்ஹாரா ரயில் பணிமனையில் இருந்து டீசல் ரயில் இன்ஜினை ஒரு கும்பல் திருடி சென்றது. கடந்த ஜனவரியில் பாட்னாவில் மொபைல் போன் டவர் திருடப்பட்டது. இந்த வரிசையில் தற்போது பிஹாரின் சம்ஸ்திபூர் பகுதியில் 2 கி.மீ. தொலைவு தண்டவாளத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சம்ஸ்திபூர் அருகே பாண்டூல் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் ரயில் தண்டவாளம் நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
இந்த சூழலில் 2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டி ருந்த தண்டவாளம் திருடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக 2 ரயில்வே அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.