மும்பை, மீராரோடு பகுதியில் வசிப்பவர் முகேஷ் (22) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கல்லூரியில் படித்து வரும் இவர், தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், முகேஷின் காதலி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், முகேஷ் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனால் முகேஷுடனான உறவை அந்தப் பெண் துண்டித்துக்கொண்டார். அதோடு அவரின் போன், மெசேஜ்களுக்கு அந்தப் பெண் பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், கடந்த 29-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு போன்செய்து, `என்னைச் சந்திக்க வரவில்லையெனில், என்னிடமிருக்கும் புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன்’ என்று மிரட்டினார். இதனால் பயந்துபோன அந்தப் பெண், முகேஷ் சொன்ன இடத்துக்குச் சென்றார். காஷ்மீரா பகுதியில் லாட்ஜ் ஒன்றில் முகேஷ் அறை முன்பதிவுசெய்து வைத்திருந்தார். அந்த அறைக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்தச் சித்ரவதைக்குப் பிறகு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண் இது குறித்து, தன்னுடைய தோழியிடம் கூறியிருக்கிறார். அவர் தனக்கு தெரிந்த சமூக ஆர்வலர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார்.

பின்னர், மூவரும் சேர்ந்து அந்த இளைஞர் குறித்து போலீஸில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாகப் பேசிய போலீஸார், “திருமணம் செய்யமாட்டேன் என்று சொன்னவுடன் அந்தப் பெண் முகேஷின் போனை எடுத்து பேசாததால், முகேஷ் கோபமடைந்திருக்கிறார். கோபத்தில் அந்தப் பெண்ணை மிரட்டி லாட்ஜ் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், இனிமேல் போனை எடுத்து பேசாமல் இருக்கக்கூடாது என்று கூறி, சித்ரவதை செய்திருக்கிறார். முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரை தேடி வருகிறோம். விரைவில் கைதுசெய்திடுவோம்” என்றனர்.