சென்னை: அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக, இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினரும் கலந்து பேசி, பொதுக்குழு மூலமாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இபிஎஸ் நிறுத்தியுள்ள வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா என வாக்களிக்கும் படிவம், அதிமுக வேட்பாளரின் ஏ, பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவைத் தலைவருக்கு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய கடிதம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மூலமாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
இவற்றை பூர்த்தி செய்து, நேற்று இரவு 7.30 மணிக்குள் கொண்டு வந்து சேர்க்குமாறு தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம்இவை சேகரிக்கப்பட்டு, விமானங்கள் வாயிலாக சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேற்று கொண்டுவந்து சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இவற்றை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழ்மகன் உசேன்இன்று சமர்ப்பிக்கிறார்.
இதற்கிடையே, ஜூலையில் நடந்த பொதுக்குழுவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், இக்கடிதம் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும், ஒருதலைப்பட்சமாகவும் இருப்பதாக கூறி அவர்கள் 4 பேரும் இதை நிராகரித்துள்ளனர். இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு இன்று தேர்தல் ஆணையத்தில் முறையிட திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன என்பது இன்று தெரியவரும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஓபிஸ் நிறுத்திய வேட்பாளர் செந்தில்முருகன் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.