மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம்

40 ஆண்டுகளாக தனது காந்த குரலால் இசை ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார். கிட்டத்தட்ட 20 மொழிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை செய்தவர், மூன்று முறை தேசிய விருது பெற்றவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.. வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. பிரபலங்கள் பலரும் வாணி ஜெயராமுடனான தங்களது இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மலையாள திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் கோபி சுந்தர், வாணி ஜெயராம் குறித்து கூறும்போது, “ஒரு கட்டத்தில் மலையாளத்தில் பாடல்கள் பாடாமல் ஒதுங்கி இருந்த வாணி ஜெயராமை கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு 2014 இல் நான் இசையமைத்த 1983 என்கிற படத்திற்காக அழைத்து வந்து ஓலஞ்சாலி குருவி என்கிற பாடலை பாட வைத்தேன். அதைத்தொடர்ந்து புலி முருகன், கேப்டன் ஆகிய படங்களில் என்னுடைய இசையில் பாடல்களை பாடியுள்ளார்.

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் வாணி ஜெயராமை தேடி வந்தன. தமிழகம், ஆந்திரா, ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்கள் வாணி ஜெயராமுக்கு மாநில அரசு விருது வழங்கி கவுரவித்தன. ஆனால் மலையாள திரையுலகில் அதிகப்படியான பாடல்களை பாடி இருந்தும் தனக்கு கேரள அரசு விருது கிடைக்காதது குறித்து நீண்ட நாட்கள் மன வருத்தத்தில் இருந்தார்.. அந்த மன வருத்தம் மறையாமலேயே இவ்வுலகை விட்டு சென்று விட்டார்” என தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் கோபி சுந்தர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.