மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு மிகவும் கவனமாக செயல்படும்படி கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 97.98 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.
ஆய்வில் கண்டுபிடிப்பு: இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்ததில் சில இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது.
அதாவது, வீட்டு உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பணியை ஆய்வு செய்ததில் உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். தகுதியான நபர்களின் ஆதார் எண்ணை மட்டுமே சேவை இணைப்புகளுடன் இணைக்கவும், அதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என, கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.