சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் அம்பலாந்தொட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாந்தொட்ட – நோனாகம, வலிபிட்டனவிலை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தாய்லாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு சுற்றுலா வீசா மூலம் நபர்களை அழைத்துச் சென்று அங்கு அவர்களை நிற்கதியாக்கி உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
பண மோசடி
இந்த சந்தேகநபர் 19 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
குறித்த தப்பிச்சென்ற நபர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடும் ஓர் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.