சென்னை: மாமூல் கேட்டு மிரட்டல்; சுற்றிவளைத்த போலீஸ்; மாடியிலிருந்து குதித்த ரெளடி – நடந்தது என்ன?!

சென்னை வியாசர்பாடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கையில் பட்டாக் கத்தியுடன் சில இளைஞர்கள் வலம் வந்தனர். மேலும், அந்த கும்பல் அங்கிருந்த கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியது. பணம் தர மறுத்தவர்களைப் பட்டாக்கத்தியால் வெட்டியிருக்கிறது இந்த கும்பல். மேலும், கடைகளின் கண்ணாடிகளை உடைத்ததுடன், அங்கு நிறுத்திவைக்கப்பட்ட கார், சரக்கு வாகனங்களின் கண்ணாடிகளைக் கத்தியால் வெட்டி, உடைத்து அராஜகம் செய்துகொண்டிருந்தது.

தாக்குதல் நடத்தும் கும்பல்

இதே கும்பல், அண்ணாநகர், செங்குன்றம் போன்ற பகுதிகளிலும் மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் போலீஸுக்கு செல்ல, தனிப்படை அமைத்துத் தேடுதல் விசாரணையில் இறங்கியது. அதில், சமீபத்தில் வில்லிவாக்கம் பகுதியில் வழக்கறிஞர் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்த சிலர் தற்போது மாமூல் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் இருவர் சிக்கினர். இந்த கும்பலுக்குத் தலைவனாக வலம் வந்தவன் கலை என்கிற கலைச்செல்வன். பிரபல ரெளடியான இவன் மட்டும் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்தான். இந்நிலையில், அவன் ஒரு வீட்டின் மாடியில் பதுங்கியிருக்கும் தகவலறிந்து அவனைச் சுற்றிவளைத்து தனிப்படை போலீஸ். இதனால், காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறான் கலை.

கை, கால் உடைந்த கலை

கீழே விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர், கலையை அங்கிருந்து மீட்டு போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டுப் போட்டுவிட்டிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பாக பட்டாக்கத்தியுடன் பொதுமக்கள் மிரட்டித் தாக்கிய கலை, தற்போது தான் செய்தது தவறு என்று சொல்லி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனையடுத்து கலை உள்ளிட்ட மாமூல் கேட்டு மிரட்டிய கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.