நிலநடுக்கத்தால் சிதைந்து போன துருக்கி-சிரியா: மீட்பு படையை அனுப்பிய இந்தியா…!

அன்காரா,

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவும் வகையில் இந்தியா 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பியுள்ளது. உடன் மோப்ப நாய் படையையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. உத்தர பிரதேசம், காசியாபாத்தில் இருந்து விமானம் மூலம் பேரிடர் மீட்பு குழு துருக்கி புறப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் உள்துறை, பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, விமான போக்குவரத்து துறை செயலளர்கள் கலந்துக்கொண்ட உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட பிற உதவிகளையும் மத்திய அரசு செய்கிறது. நிவாரணப் பொருட்கள் அங்காரா, இஸ்தான்புல் நகரில் உள்ள இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.