புதுடெல்லி: டெல்லி மேயர் தேர்தல் நேற்று 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும் துணை மேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். பாஜகவும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவித்தது.
இதையடுத்து ஜனவரி 6, 24 ஆகிய தேதிகளில் கூடிய டெல்லி மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக உறுப்பினர்கள் இடையே சூடான வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டது. இதனால் மேயர், துணை மேயர் தேர்தலை நடத்தாமலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி மாமன்ற கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்கு இடைக்கால அவைத் தலைவர் சத்ய சர்மா தலைமையில் தொடங்கியது. அப்போது மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறும் எனவும் இதில் நியமன உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் எனவும் அவைத் தலைவர் சத்ய சாய் அறிவித்தார்.
இதற்கு ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நியமன உறுப்பினர்கள் வார்டு கமிட்டிகளில் மட்டுமே வாக்களிக்கலாம், மேயர், துணை மேயர் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என வாதிட்டனர்.
இதனால் ஏற்பட்ட அமளியால் மேயர் தேர்தல் நடத்தப்படாமல் 3-வது முறையாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அவையிலிருந்து வெளியில் வந்த ஆம் ஆத்மி உறுப்பினர் ஆதிஷி கூறும்போது, “அவையை ஒத்திவைக்கும் வகையில் அதன் நடவடிக்கைகளை பாஜக சீர்குலைக்க திட்டமிட்டுள்ளது. நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்கிறோம். நீதிமன்ற கண்காணிப்பு டன் தேர்தலை நடத்தக் கோரவுள்ளோம்.” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் இதனை உறுதி செய்தார்.
1957-ம் ஆண்டு டெல்லி மாநகராட்சி சட்டப்படி, மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்திலேயே மேயரும் துணை மேயரும் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் தேர்தல் நடைபெற்று 2 மாதங்களுக்கு பிறகும் மேயரை டெல்லி பெறவில்லை.