புதுடெல்லி: முற்றிலும் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விமானம் தாங்கி போர்க் கப்பல் அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகு ரக போர் விமானமான தேஜஸ் சோதனை அடிப்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட விக்ராந்த் போர்க் கப்பலின்விமான ஓடுதளத்தில் இந்தியதொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்ட தேஜஸ் விமானம் முதல் முறையாக வெற்றிகரமாக தரை யிறக்கப்பட்டது. இது, இந்திய தற்சார்பு திட்டத்தின் ஒரு வரலாற்று மைல்கல் நிகழ்வாகும்’’ என்று தெரிவித்துள்ளது.
ரூ.20,000 கோடி செலவில் கட்டப்பட்ட 45,000 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட விக்ராந்த் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாகும். இதில், 30 விமானங்களை கொண்டு செல்ல முடியும்.
அத்துடன் இந்த போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 1,600 பணியாளர்கள் தங்க முடியும்.