ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, மயானப் பாதை வசதி, குடியிருப்புகளில் அடிப்படை வசதி, திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளாக மாற்றப்பட வேண்டும் எனவும், அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகளை எந்தவித தாமதமுமின்றி, உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக நில நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் பயனாளிகளுக்கு முறையாக அளந்து காட்டப்பட வேண்டும் என்றும், அங்கு அவர்கள் வீடுகட்டி குடியேறுவதற்கான வசதிகளையும் செய்துதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை எவ்வித தாமதமுமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்புப் பணியினை நிலுவையின்றி விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்த்து வாரிய உறுப்பினர்களின் தேவைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆய்வின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புறங்களில் மயான வசதி மற்றும் மயான வழிப்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்றும், இத்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதிகளை முழுமையாக செலவு செய்திடவும் அறிவுறுத்தினார்.