அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதுமை பெண் திட்டம்? முதல்வரிடம் கொண்டு செல்லும் அப்பாவு

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடாக 20 ஆயிரம் ரூபாய் அறிவித்ததில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் நெல்லை மாவட்டத்தையும் வறட்சி மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும் என நெல்லையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.

புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாம் கட்ட தொடக்க விழா தமிழகத்தில் இன்று நடைபெற்றது. இதனை சென்னையில் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் காசோலைகளை வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி மேடையில் கணினி திரையில் முதல்வர் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு 1590 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் படி ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை கொடுத்து துவக்கி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென பலர் கோரிக்கை வைத்துள்ளனர். அது முதல்வரிடம் கூறப்படும் என தெரிவித்தார்.

டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு அரசின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் அப்போதைய அதிமுக அரசு அதிக அளவில் கடன் வாங்கி உள்ளதாகவும், அதற்கு தற்போது வட்டி கட்டி வருவதாகவும் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு மழை பெய்யாத காரணத்தினால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் களக்காட்டில் வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரண உதவியை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.