இஸ்லாமாபாத், இந்தியாவுக்கு வர முயன்ற, பாகிஸ்தான் ஹிந்துக்கள் ௧௯௦ பேரை, அந்நாட்டு அதிகாரிகள் நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இங்கு, சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் ௧௯௦ ஹிந்துக்கள், நேற்று முன்தினம் வாகா எல்லைப் பகுதிக்கு வந்தனர். அங்கு, இந்தியாவுக்கு மத யாத்திரை செல்வதாகக் கூறி, ‘விசா’க்களை காண்பித்துள்ளனர். ஆனால், அங்கிருந்த குடியேற்ற அதிகாரிகள், இது சரியான காரணம் இல்லை எனக் கூறி, அனுமதி தர மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ‘மத யாத்திரை செல்வதாகக் கூறி விசா பெறும் ஹிந்துக்கள் இந்தியா செல்கின்றனர். பின் அங்கேயே தங்கி விடுகின்றனர்’ என தெரிவித்துள்ளது.
இது பற்றி பாகிஸ்தானின் அமைதி மற்றும் நீதிக்கான மையம் கூறியதாவது:
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில், ௨௨ லட்சம் பேர் சிறுபான்மை ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினர், பாகிஸ்தானின் அரசு அமைப்புகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
சிந்து மாகாணத்தில் உள்ள ஹிந்துக்கள், பயங்கரவாதிகளின் கடும் வன்முறைக்கும் ஆளாகி வருகின்றனர். இதனாலேயே அவர்கள் இந்தியா செல்ல முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அது கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement