ஈரோடு கிழக்கு தேர்தல்: அதிமுக, காங்கிரஸ், தேமுதிக வேட்புமனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த இடைத்தேர்தலில் 96 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அது மட்டுமின்றி ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அதற்கு மாற்றாக மற்றொரு மனு என மொத்தம் 121 மனுக்கள் பெறப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தேர்தல் மேலிடப் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையருமான சிவக்குமார் தலைமையில் வேட்புமனு பரிசீலனை காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நான்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது முதல் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்டோரது வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த அமமுகவின் வேட்பாளர் சிவபிரசாத்தின் வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனுடைய இரண்டு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெற 10 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.