சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் கடந்த ஜன.27-ம் தேதி அறிவித்தார். மேலும், துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்களை கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவபிரசாந்த், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் கடந்த 3-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று நேற்று (பிப்.7) தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று டிடிவி தினகரன் அறிவித்தார்.
இது தொடர்பாக இன்று (பிப்.8 ) செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அமமுகவிற்கு எந்தவித தடையும் இல்லை. குக்கர் சின்னம் கிடைப்பதிலும் எந்த வித தடையும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் பல சின்னங்களில் எங்களின் வேட்பாளர்கள் நின்றார்கள்.
நேற்று (பிப்.7) மதியம் 1 மணிக்கு தான் சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வந்தது. சுயேட்சை சின்னத்தில் போட்டியிடலாம் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் எந்தவித குழப்பமும் வேண்டாம் என்பதால் நிர்வாகிகளுடன் பேசி இந்த முடிவை எடுத்து அறிவித்தேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் எப்போதும் இல்லை. எல்லாரும் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கூறி வருகிறேன். ஒரே கட்சியில் இல்லை. திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒரே அணியில் இணைய வேண்டும். இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது. அதை வைத்து அவர்கள் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கிடையாது. திமுக கூட்டணியை ஆதரிக்க மாட்டோம். அதிமுக கூட்டணியையும் ஆதரிக்க மாட்டோம். தீய சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம். துரோக சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம். இவர்களை எதிர்த்து தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.” இவ்வாறு அவர் கூறினார்.