குப்வாரா: காஷ்மீரில் கொட்டும் பனியில் கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் 5.கி.மீ தூரம் தோளில் சுமந்து வந்து பிரசவத்துக்கு சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கலாரூஸ் பகுதியில் உள்ளது பதாகேட் கிராமம். கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த கிராமத்துக்கு செல்லும் சாலைகள் பனியால் மூடப்பட்டன. பனி குவிந்து தெருக்கள் மிகவும் குறுகலாக மாறியதால் இங்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பதாகேட் கிராமத்திலிருந்து ராணுவத்துக்கு ஓர் அவசர போன் அழைப்பு வந்தது. கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
உடனடியாக ராணுவத்தின் மீட்பு படை மற்றும் மருத்துவக் குழுவினர் பதாகேட் கிராமத்துக்கு விரைந்தனர். கொட்டும் பனியில் கர்ப்பிணியை மீட்ட ராணுவ வீரர்கள், அவரை தோளில் சுமந்து 5 கி.மீ தூரம் நடந்து வந்தனர். சுமோ பாலத்துக்கு அருகே தயாராக நின்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணியை ஏற்றிய ராணுவத்தினர் அவரை கலாரூஸ் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நலமாக உள்ளனர். சரியான நேரத்தில் உதவி செய்த ராணுவ வீரர்களுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவ ஊழியர்கள், பதாகேட் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.