கோவை ரயில் நிலையத்தின் 150 வது பிறந்தநாள் இன்று: என்னவெல்லாம் சரிசெய்ய வேண்டியுள்ளது?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என கோவைக்கு பெயர் வரக்காரணமாக இருந்தது கோவை ரயில்வே சந்திப்பு என பொதுமக்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என கோவைக்கு பெயர் வரக்காரணம் அப்போது இருந்த மில்கள். அந்த மில்கள் வர காரணமாக இருந்ததே கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்புதான். இது கோவை மக்களின் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பொழுதுபோக்கும் இடமாகவும் கோவை ரயில்வே சந்திப்பு இருந்துள்ளது. கோயம்புத்தூர் சந்திப்பு உருவானது உள்ளிட்ட சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையில் முதல் முறையாக 1862 ஆம் ஆண்டு போத்தனூர் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. இங்கு, சரக்குகளை கையாள்வது மட்டுமின்றி, தங்களின் சொந்த நாட்டில் உள்ளது போன்ற காலநிலை கொண்ட குளுகுளு உதகைக்கும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் அதிகளவில் கோவையில் தங்க ஆரம்பித்ததால், அருகாமையிலேயே ரயில் நிலையம் வேண்டும் என உருவாக்கப்பட்டது தான், தற்போதுள்ள கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பு.
image
முதலில் மேற்கு பகுதியில் கடந்த 1873 பிப்ரவரி 1 ஆம் தேதி உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்புக்கு, சில காலங்களிலேயே தற்போது செயல்பாட்டில் உள்ள கிழக்கு திசையில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. விவசாயம் மட்டுமே பிரதானமாக இருந்த கோவை மாவட்டத்தில், தொழில் நகரம் என்ற பெயருக்கும் பருத்தி மில்கள் உருவானதற்கும் காரணமாக இந்த ரயில்வே சந்திப்பு இருந்துள்ளது. தொழில் மேம்பாடு மட்டுமின்றி, கல்வி மற்றும் வர்த்தகத்திற்கும் அடித்தளமாக அமைந்தது கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பு, கோவை தொழிற் துறையினரின் கௌரவமாகவும் பார்க்கப்பட்ட சுவாரசிய வரலாற்றை விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் ராஜேஷ் கோவிந்தராஜூலு…
image
“30 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பில் மொத்தம் 6 நடைமேடைகள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் 35 ரயில்களும், இதன் வழியாக 97 ரயில்களும் இயக்கப்படுகிறது. மொத்தம் 166 ரயில் சேவைகள் கொண்ட ரயில்வே சந்திப்பில லிப்ட், எஸ்கலேட்டர், வீல் சேர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்வே சத்திப்பில் பயணச்சீட்டு மூலம் ஆண்டுக்கு ரூ.152 கோடியும், வணிகம் மூலம் ரூ.33 கோடியும், பார்சல் சேவை மூலம் ரூ.3 லட்சம் என சேலம் கோட்டத்தில் கிடைக்கும் ரயில்வே வருவாயில் 45 சதவீதம் கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பு மூலம் கிடைத்து வருகிறது” என்றார்.
image
தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டித் தருவதில் 3வது இடத்தில் இந்த ரயில் நிலையம் இருந்தாலும், போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோவை தொழில் நகரமாக உருவாக காரணமாக இருந்த ரயில்வே சந்திப்பு தற்போது, அதன் மகத்துவத்தை இழந்து வருவதாக கொங்கு ரயில்வே மேம்பாட்டு குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், “கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில்வே மேம்பாட்டிற்கும், தற்போது சேலம் ரயில்வே கோட்ட மேம்பாட்டிற்கும் காரணமான கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பை 1950-ல் இருந்தது போலவே சேலம் ரயில்வே கோட்டத்திலிருந்து பிரித்து, தனி கோட்டமாக அறிவிக்க வேண்டும். தென் மாவட்டங்களுக்கும், பெங்களூருக்கும் ரயில்களை இயக்க வேண்டும். மற்றும் ரயில் நிலைய உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும்” என்று கொங்கு ரயில்வே மேம்பாட்டு குழுவினர் கோரிக்கை வைத்தனர்.
image
150 வது பிறந்தநாளை கொண்டாடும் கோவை ரயில்வே சந்திப்புக்கு அதற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை. ஆகவே வருவாயையும், வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.