சீனா என்ற பெயரை பிரதமர் உச்சரிப்பாரா.? – ஹைதராபாத் எம்பி கேள்வி.!

நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பாஜக அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்த சூழலில் பட்ஜெட் தாக்கலின் போது குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று மக்களவையில் பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். திரவுபதி முர்மு உரை மூலம் பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பெருமை கிடைத்துள்ளது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி மட்டும் இல்லாமல், வாழ்த்துக்களையும் தான் தெரிவிப்பதாக மோடி கூறினார்.

இந்த நிலையில் ஏ.ஐ. எம்.ஐ.எம் தலைவரும், தெலங்கானா எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டுவருவதாக நாடாளுமன்றத்தில் பேசினார். இது குறித்து கூட்டத்தொடரில் பேசிய எம்பி ஓவைசி, ‘‘நரேந்திர மோடி அரசாங்கம் இந்திரா காந்தி சகாப்தத்தை மீண்டும் கொண்டு வருகிறது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்றத்துடன் ஒன்றிய அரசு போர் தொடுக்கிறது.

நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்காக அரசாங்கம் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. சிறுபான்மையினருக்கான பட்ஜெட் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 19 சதவீதமாக இருக்கும் சிறுபான்மையினர் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்படவில்லை. நரேந்திர மோடி அரசு முஸ்லிம் குழந்தைகள் படிப்பதை விரும்பவில்லை. மாறாக அவர்கள் வறுமையில் பலியாவதையே விரும்புகிறார்கள்.

இந்தியா-சீனா எல்லை நிலைமை கவலைகளை எழுப்புவதாக உள்ளது. அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்கள் அடிப்படை கட்டமைப்பு குறித்து கருத்து தெரிவிக்கின்றனர். கொலீஜியம் குறித்து சட்ட அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.தேசிய நீதிபதிகள் ஆணையம் (National Judicial Appointments Commission) தொடர்பான மசோதா வந்தபோது, அது அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என்று சொன்ன ஒரே எம்பி நான் தான்.

பிரதமர் மோடி இந்திரா காந்தியிடம் பாடம் கற்க வேண்டும். நீதித்துறை தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திரா காந்தி கூறினார். இப்போது பிரதமர் மோடி நீதித்துறை தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே இந்திரா காந்தி காலத்தை நீங்கள் மீண்டும் கொண்டு வருகிறீர்கள்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையினர் இழுபறியில் ஈடுபட்டுள்ளனர். பில்கிஸ் பானு 20 ஆண்டுகளாக போராடி வருகிறார், ஆனால் அவரது பெயர் பில்கிஸ் பானோ என்பதால் அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிதல்: மத்திய அரசு தகவல்!

சீனாவின் பெயரை பிரதமர் கூறுவாரா? 65 ரோந்துப் புள்ளிகளில், 26 ரோந்துப் புள்ளிகளில் இந்தியாவால் ரோந்துச் செல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் சீனாவைப் பார்த்து பயப்படுகிறீர்கள். விலகல் நடந்தது. சீன எல்லையில் தணிவு மற்றும் தூண்டுதல் எப்போது நிகழும்?’’ என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.