சென்னை: யூடியூப் பார்த்து செயின் பறித்த தொழிலதிபர் – சிக்கியவர்கள், தப்பிக்கப் பயன்படுத்திய 3 வழிகள்

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் திருவள்ளுவர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் கடந்த மாதம் கெருகம்பாக்கத்திலுள்ள திருமண மண்டபத்துக்கு வந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்துவந்த இரண்டு பேர், ராதா அணிந்திருந்த நான்கு பவுன் தங்க செயினைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார் ராதா. அதன்பேரில் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலான தனிப்படை போலீஸார் செயின் பறிப்பு கொள்ளையர்களைத் தேடிவந்தனர். சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்தது.

சிசிடிவி கேமரா

இருப்பினும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை, 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வுசெய்தனர். அப்போது கொள்ளை நடப்பதற்கு முன்பு மர்ம நபர்கள் எந்த வழியாக வந்திருப்பார்கள் என்று ரிவர்ஸ் முறையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அதில் போலீஸாருக்கு சில தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது மதுரவாயல், நெற்குன்றத்தைச் சேர்ந்த விஜய் (29), அவரின் நண்பர் நொளம்பூரைச் சேர்ந்த படகோட்டி தமிழன் (35) ஆகிய இருவர்தான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி இருவரையும் கைதுசெய்தனர். கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில் “கைதான விஜய், அவரின் நண்பர் படகோட்டி தமிழன் ஆகிய இருவரும் கொள்ளையடிப்பதற்கு முன்பு யூடியூபைப் பார்த்து காவல் துறையிடமிருந்து தப்பிக்க என்னென்ன வழிகள் என்பதை தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அதன்படி மூன்று செயல்களை அவர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் கடைப்பிடித்திருக்கிறார்கள். கொள்ளையடிக்கச் செல்லும்போது பயன்படுத்தும் பைக்கின் பதிவு நம்பர் பிளேட்டை முதலில் மாற்ற வேண்டும். இரண்டாவதாக சிசிடிவி-யில் முகம் தெளிவாக பதிவாகமலிருக்க மாஸ்க் அல்லது ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டும். மூன்றாவதாக அடிக்கடி டிரஸ்ஸை மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்படி போலி நம்பர் பிளேட் ஒன்றை இவர்கள் இருவரும் தயாரித்து அதை பைக்கில் பொருத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு முகம் தெரியாமலிருக்க மாஸ்க், ஹெல்மெட்டை அணிந்திருக்கிறார்கள். பின்னர், சில டிரஸ்களையும் அவர்கள் கையில் எடுத்து வந்திருக்கிறார்கள்.

விஜய்

ராதாவிடம் நகையைப் பறித்த இவர்கள் அதன் பிறகு 5 கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு தாங்கள் அணிந்திருந்த டிரஸ்ஸின் மேல் இன்னொரு டிரஸ்ஸை அணிந்திருக்கிறார்கள். அவ்வாறு டிரஸ்களை அடிக்கடி மாற்றியதால் சிசிடிவி மூலம் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் எங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. அதனால்தான் ரிவர்ஸ் முறையைப் பயன்படுத்திக் கொள்ளையர்களைக் கண்டுபிடித்தோம். கொள்ளையடித்த பிறகு விஜய் பைக்கிலும் படகோட்டி தமிழன் ஷேர் ஆட்டோவிலும் சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் கொள்ளையடித்த நகையைப் பங்குபோட்டு பிரித்துக்கொண்டு பல இடங்களுக்குச் சுற்றி, பின்னர் வீடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். குறிப்பாக எந்த இடத்திலும் செல்போனை அவர்கள் பயன்படுத்தவில்லை. போலீஸிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட இவர்கள் இருவரும் முதல் தடவையாகக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்றனர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “செயின் பறிப்பு சம்பவத்தில் கைதான விஜய், டிகிரி படித்தவர். மேலும், அவர் கால்டாக்ஸி பிசினஸ் செய்துவருகிறார். கொரோனா காலகட்டத்தில் அவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கால்டாக்ஸி பிசினஸில்தான் டிரைவராக படகோட்டி தமிழன் விஜய்க்கு அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் நட்பாகப் பழகி வந்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்தியிருக்கிறார்கள். அப்போதுதான் படகோட்டி தமிழன் தனக்குப் போதிய வருமானம் இல்லாததால் கடனில் தவிப்பதாகக் கூறியிருக்கிறான்.

படகோட்டி தமிழன்

இதையடுத்துதான் இருவரும் சேர்ந்து செயின் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். போலீஸிடம் சிக்காமலிருக்க யூடியூப் மூலம் சில டிப்ஸ்களைத் தெரிந்துகொண்ட இவர்களைப் பிடிக்க சிசிடிவி-யில் ரிவர்ஸ் முறையைப் பின்பற்றி கைதுசெய்துவிட்டோம். இவர்கள்மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். தன்னுடைய நண்பன் படகோட்டி தமிழனுக்கு உதவி செய்யவே கால்டாக்ஸி அதிபர் விஜய் வந்ததாக விசாரணையில் தெரிவித்தார். இவர்கள் இருவரும் செயின் பறிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டதும் அவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் சட்டப்படி இருவரையும் கைதுசெய்து தங்க செயினை மீட்டுவிட்டோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.