விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்குக! – சீமான் வலியுறுத்தல்!

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

காவிரிப்படுகை மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி அழுகியுள்ள பல இலட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு 20 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருப்பது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. கடும் உழைப்பையும், பொருளாதாரத்தையும் இழந்து செய்வதறியாது தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை வழங்க மறுக்கும் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ 11 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், காவிரிப்படுகை பகுதிகளில் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பெய்த கன மழையால் பல இலட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. பாடுபட்டு விளைவித்த பயிர்களைக் கண்முன்னே அழியக்கொடுத்து, வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் இழப்பைச் சந்தித்து தவித்து வருவதோடு, எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள நட்டத்தினால், வேளாண் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

மேலும், அறுவடை செய்யப்பட்டு நேரடி கொள்முதல் நிலையங்களின் வெளியே காத்திருப்பில் இருந்த நெல் மூட்டைகளும், போதுமான பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணான கொடுமைகளும் அரங்கேறியுள்ளன. இதனால், நெல்லின் ஈரப்பதம் 19 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்ததை காரணம் காட்டி, நெல் கொள்முதல் பணிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாத அரசின் தவற்றுக்கு, நெல் கொள்முதலை நிறுத்தி வைத்து அப்பாவி விவசாயிகளை தண்டிப்பது எவ்வகையில் நியாயமாகும்? பேனா வைக்க 80 கோடிகளை வீணாக கடலில் கொட்டும் திமுக அரசிடம், நெல் மூட்டைகளை பாதுக்காக்க தரமான கிடங்குகள் அமைக்க பணமில்லையா? நெல் மூட்டைகளை கிழிந்த தார் பாய்களை கொண்டு மூடுவதற்கு பெயர்தான் பெருமைமிக்க திராவிட மாடலா?

ஆகவே, தமிழ்நாடு அரசு கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பெருங்குடி மக்களைப் பாதுகாக்கும் வகையில் இழப்பீட்டினை ஏக்கருக்கு 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதலுக்கான நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டுமெனவும், நெல் கொள்முதலுக்கான தரத்தினை நிர்ணயிக்கும் உரிமையை மாநில அரசுகள் மீளப்பெற்றிட, திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஒன்றிய அரசிற்கு வலுவான அழுத்தம் கொடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.