ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர் நாசர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ராஹரப் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் நாசர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்தாவது, “இந்த தேர்தலில் நிச்சயம் திமுக தான் வெற்றி பெறும். எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி.
அதிமுகவை பொறுத்தவரை நான்காக பிரிந்து உள்ளார்கள். இவர்கள் நான்கு பேரும் ஒருவரை ஒருவர் காலி செய்வதிலேயே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் எங்களுடைய பணியை செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய இலக்கு என்பது இந்த தேர்தலில் வெற்றி பெறுவது தான்.
ஆயிரம் சொன்னாலும் அதிமுகவினருக்குள் குளறுபடிகள் இருப்பது தான் உண்மை. அதிமுகவை இயக்குவது பாஜக தான். பாஜக தான் இவர்களுக்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது. அண்ணாமலை சொல்லித்தான் ஓபிஎஸ் வாபஸ் வாங்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.