ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பெத்தபுரம் மண்டலம் ஜி.ராகம்பேட்டாவில் அம்பட்டி சுப்பண்ணா என்பவருக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை இருக்கிறது. இந்த ஆலை கடந்தாண்டு புதிதாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் உள்ள டேங்கர்களைச் சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. எண்ணெய் டேங்குக்குள் சுத்தம் செய்ய இறங்கியபோது, நச்சுவாயு தாக்கி ஒவ்வொரு தொழிலாளியாக மயங்கி உள்ளே விழுந்திருக்கின்றனர். இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்த போது, அதில் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்திலுள்ள படேரு, புலிமேரு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, நரசிம்மா சாகர், வாஞ்சி பாபு, கர்ரி ராமராவ். கட்டமூர்த்தி, ஜெகதீஷ் மற்றும் பிரசாத் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. நச்சுவாயு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தொட்டியில் நுழைந்த ஊழியர்கள் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. தொட்டியைவிட்டு மேலே ஏறிய பிறகும் மூச்சு விட முடியவில்லை என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறினார். தொழிலாளர்களின் உடல்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களின் உறவினர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. காக்கிநாடா எஸ்.பி ஆவி ரவீந்திரநாத் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.