ஈரோட்டில் அதிமுகவிற்கு கெட்-அவுட்; சீல் வச்சு துரத்தி விட்ட தேர்தல் அதிகாரிகள்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாளைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்கு முன்பு பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்று கொள்ளலாம். இதற்கிடையில் சுயேட்சைகள் தங்களுக்கு சின்னத்தை தேர்வு செய்யும் வகையில் 191 சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று காலை வெளியிட்டுள்ளது.

இறுதிகட்ட வியூகம்

நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான உடன் தங்கள் சின்னங்கள், வேட்பாளர்களை முன்னிறுத்தி பிரச்சாரம் களைகட்டும். தற்போதே ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களிடம் எப்படி வாக்கு சேகரிப்பது என வியூகங்கள், ஸ்வீட் பாக்ஸ் விநியோகம் தொடர்பான பிளான்களும் கச்சிதமாக போட்டு வைத்து வருகின்றனர்.

பிரதான போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை
காங்கிரஸ்
, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் பிரதான போட்டி நிலவுகிறது. இதைத் தவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் வாக்குகளை பிரிக்கும் சக்தியாகவே விளங்குவர் எனக் கூறப்படுகிறது. அதிலும் தேமுதிகவின் ஆதரவை பெற பாஜக மூலம் அதிமுக காய்களை நகர்த்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது.

தேமுதிக ஆதரவு

அதுமட்டும் உறுதியானால் கடைசி நேரத்தில் தேமுதிக தனது வேட்புமனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளது. அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழுவை
எடப்பாடி பழனிசாமி
களமிறக்கி விட்டுள்ளார். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக ஆலோசனை

இந்நிலையில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதற்கு உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மண்டபத்தில் இனி கூட்டம் நடத்தக் கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இன்று காலை மீண்டும் அதே மண்டபத்தில் அதிமுகவினர் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி ஈரோடு மாநகராட்சி தேர்தல் அதிகாரி முத்துகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

மண்டபத்திற்கு சீல்

அங்கு கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்த அவர், உடனே அனைவரையும் வெளியேறுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அதிமுகவினர் முரண்டு பிடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அப்போதும் சச்சரவு முடிவுக்கு வந்தபாடில்லை.

கடைசியில் அனைவரையும் வெளியேற்றி திருமண மண்டபத்திற்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துவிட்டனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு விஷயம் தெரிந்தால் என்ன நினைப்பார்? முறையாக அனுமதி பெற வேண்டாமா? என ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புவதை கேட்க முடிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.