`கடலுக்குள் பேனா நினைவு சின்னம்'- தோழமை கட்சிகள் சுட்டிக்காட்டியதை கவனிப்பாரா ஸ்டாலின்?!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, அவர் பயன்படுத்திய பேனாவின் சிலையை, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்கு, அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க, நாதக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரே கடலில் பேனா சிலை அமைக்கும் முடிவை எதிர்க்கும் வகையில் மழுப்பலான கருத்தை கூறியிருகின்றனர்.

மெரினா கடலில் பேனா சிலை

`நிதி நெருக்கடி நிலவும் சூழலில் இதற்காக செலவழிக்க வேண்டுமா?’ – கே. பாலகிருஷ்ணன்

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர் தமிழகத்தில் ஆளுமையாக இருந்தவர். பல்வேறு தளங்களில் நல்ல சாதனைகள் படைத்திருக்கிறார். அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் வைப்பது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நிச்சயமாக வைக்கலாம். ஆனால், அப்படி ஒரு நினைவுச்சின்னம் வைக்கின்ற பொழுது பொதுமக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படும் வகையில் வைக்க வேண்டாம்.

பெரிய ஆளுமையாக இருக்கக்கூடிய கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைப்பதே காலகாலத்திற்கும் சர்ச்சைக்குள்ளாகி இருப்பதைப் போல் ஏன் வைக்க வேண்டும்? சர்ச்சை இல்லாத, எல்லாரும் ஏற்றுக் கொள்கின்ற ஒத்தக் கருத்தை உருவாக்கி வைக்க வேண்டும். மேலும், நிதி நெருக்கடி இருக்கும் பொழுது கூடுதலாக பணம் இதற்காக செலவழிக்க வேண்டுமா? என்ற கேள்வி எங்களுக்கும் இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

மேலும், “மீன்வளம் பாதிக்கப்படுமா, கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா, நாளை கடல் அரிப்பு ஏற்படுமா போன்ற பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. எனவே, எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக, சர்ச்சையில்லாமல் ஒரு நினைவு சின்னம் அமைப்பதுதான் கலைஞருக்கு நாம் செலுத்தக்கூடிய மரியாதையாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதானமாக யோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பதுதான் நல்லது!” என கூறியிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன்

`அனைவரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும்’ – திருமாவளவன்

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், “முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமானது. இந்த சின்னம் பொதுமக்கள் அனைவரும் வரவேற்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை கவனத்தில் கொண்டு முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

`சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்’ – ஜவாஹிருல்லா:

தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பது தேவையான ஒன்றுதான். ஆனால் அதேசமயம் சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் பேனா நினைவு சின்னத்தை அமைக்க வேண்டும்!” என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

அதாவது, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளே சொல்லவரும் கருத்தின் சாரம்சம் என்னவென்றால், “கலைஞருக்கு பேனா சிலை வைக்கவேண்டிய ஒன்றுதான்; அதை நிச்சயம் வையுங்கள். ஆனால் அதை கடலில்தான் வைப்போம் என்ற பிடிவாதத்தை சற்று மறுபரிசீலனை செய்யுங்கள்! எதிர்ப்பில்லாமல் பொதுமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையுங்கள்” என்பதுதான். தோழமை கட்சிகளின் எதிர்ப்பை கவனிப்பாரா ஸ்டாலின்? இல்லை `அனைத்து துறைகளின் ஒப்புதல்களை பெற்றுவந்து கட்டாயம் கலைஞரின் பேனா நினைவுச்சின்னத்தை அமைப்போம்!’ என பிடிவாதம் காட்டுவாரா ஸ்டாலின்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.