நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், ‘சட்டபூர்வ அனுமதி பெற்றே பொதுமக்களின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக் கேட்கிறோம்’ என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.
குடிமக்களின் அந்தரங்கத்தை அரசு உளவு அமைப்புகள் வேவு பார்ப்பதைத் தடுப்பதற்கு இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறதா? என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், “இந்திய ஒன்றிய அரசு அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தால் உரிய அனுமதி பெறப்பட்ட பிறகு அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளால் குடிமக்களின் தகவல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக ஒட்டுக் கேட்கப்படுகிறது, உளவு பார்க்கப்படுகிறது.” என பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு பதில்
மேலும், “இந்திய தந்திச் சட்டத்தின் பிரிவு 5 இன் துணைப் பிரிவு (2) இல் உள்ள விதிகளோடு இணைந்த 1885 இந்தியத் தந்தி விதிகளும்; 1951 இன் விதி 419A மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69, தகவல் தொழில்நுட்பம் (தகவல் இடைமறிப்பு, கண்காணிப்பு மற்றும் மறைகுறியாக்கத்திற்கான நடைமுறை மற்றும் பாதுகாப்புகள்) விதிகள், 2009 ஆகியவையும் இதற்கு அதிகாரம் அளித்துள்ளன. வரைவு மசோதாவில் இதுபற்றி ஏதும் சொல்லப்படவில்லை” எனவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.