புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இதற்காக மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரம் மற்றும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது.
விவாதத்தின்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கூறியுள்ள புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் கார்கே பேசும்போது, “பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்து 2014-ல் ரூ.50 ஆயிரம் கோடியாக இருந்தது. இது 2019-ல் ரூ.1 லட்சம் கோடியானது. அதற்கடுத்த 2.5 ஆண்டில் 13 மடங்கு உயர்ந்துள்ளது. என்ன மாயாஜாலம் நடந்தது என எனக்குத் தெரியவில்லை” என்றார்.
இதற்கு பாஜக எம.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “பங்குச் சந்தை உயர்வால் அதானி சொத்து மதிப்பு உயர்ந்தது. இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய கார்கே, “அதானி விவகாரத்தில் மவுன ஆசாமி போல் இருப்பது ஏன்என பிரதமரை கேட்க விரும்புகிறேன். பொதுவாக மற்றவர்களை அச்சுறுத்தும் நீங்கள், தொழிலதிபர்களை அச்சுறுத்த தயங்குவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
பதவிக்கு அழகல்ல: இதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசும்போது, “இவ்வாறு பேசுவது உங்கள் பதவிக்கு அழகல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் சில பதவிகளை வகிப்பவர்கள் மீது அனைவருக்கும் மிகப்பெரிய மரியாதை உள்ளது.
‘இந்த அவையில் ஆளும் கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், 2 முன்னாள் பிரதமர்கள் பேசுவார்கள், எனவே, அவை விதி புத்தகத்தை நான் நன்கு படிக்க உள்ளேன்’ என கடந்த டிசம்பர் 8-ம் தேதி நான் இந்த அவையில் கூறியதை நினைவுகூர்கிறேன். மூத்த உறுப்பினரான உங்களைக்கூட கண்ணியக்குறைவாக யார் பேசினாலும் அதையும் நான் கண்டிப்பேன். உங்கள் பதவி மிகவும் உயர்ந்த அரசியல் சாசன பதவி. அதற்கேற்ப நீங்கள் பேசுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
பிரதமர் மோடியின் சிரிப்பு: காரசாரமான வாதங்களுக்கு நடுவே மல்லிகார்ஜுன கார்கே சற்று தயங்கியபடி, “வழக்கறிஞராக பணியாற்றியபோது தொடக்கத்தில் பணத்தை கைகளால் எண்ணியதாகவும், பின்னர் தொழில் விரிவடைந்ததும் பணத்தை எண்ணுவதற்காக இயந்திரம் வாங்கியதாகவும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஏற்கெனவே என்னிடம் தெரிவித்தார்” என்றார்.
அப்போது தன்கர் இரு கைகளையும் கூப்பியபடி, “நான் அவ்வாறு கூறவில்லை” என்றார். மேலும் இதற்குக் கூட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என நீங்கள் கேட்கக் கூடும் என்றார். அப்போது அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர்.