ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார்

இந்தியத் திரையுலகத்தின் கனவுக்கன்னி என அழைக்கப்பட்ட நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கில் கதாநாயகியாக பல வெற்றிப் படங்களில் நடித்து ஹிந்திப் பக்கம் சென்று அங்கு வெற்றிக்கொடி நாட்டியவர். 80, 90களில் பாலிவுட்டின் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர். தன்னுடைய 54வது வயதில் அகால மரணமடைந்தார்.

ஸ்ரீதேவியைப் பற்றிய பயோகிராபி புத்தகம் ஒன்றை அவரது குடும்பத்திற்கு நெருக்கமான திரஜ்குமார் என்பவர் எழுதியிருக்கிறார். ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் ஆன திரஜ்குமார் அந்த புத்தகத்திற்கு “ஸ்ரீதேவி – த லைப் ஆப் எ லெஜன்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ஸ்ரீதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை முதற்கொண்டு வெளிப்படையாக எழுதியுள்ளாராம். அவரைப் பற்றிய முழுமையான ஒரு புத்தகமாக இருக்கும் என்று புத்தகத்தை வெளியிட்டுள்ள பதிப்பகத்தார் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகத்தில் ஸ்ரீதேவி வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்த போது அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த சில ஹீரோக்கள் அவரைக் காதலித்ததாகவும் கூட கிசுகிசு உண்டு. ஹிந்திக்குச் சென்ற பிறகும் அங்குள்ள சில ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், தயாரிப்பாளரான, ஏற்கெனவே திருணமான போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. அவரது இரண்டு மகள்களில் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். போனி கபூர் பற்றி நமது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அஜித்தின் கடைசி மூன்று படங்களைத் தயாரித்தவர் அவர்தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.