லக்னோ: உலகிற்கான பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் இந்தியாவின் கையில் உள்ளது. என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு-2023 நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி,‘‘உத்தரப்பிரதேசம் ஒருகாலத்தில் மோசமான பொருளாதார நிலையை கொண்ட மாநிலங்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தையான பீமாரு என அழைக்கபட்டு வந்தது(பீகார், மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம்). ஆனால் தற்போது உத்தரப்பிரதேச மாநிலமானது நல்லாட்சிக்கு பெயர்போன மாநிலமாக மாறியுள்ளது.
இன்று உத்தரப்பிரதேசம் நம்பிக்கையாக மாறிவிட்டது. இந்தியா உலகிற்கு பிரகாசமான இடமாக இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரப்பிரதேசம் உந்துதலாக உள்ளது. 5,6 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளது. உத்தரப்பிரதேசம் நல்லாட்சிக்கான அடையாளமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றது.
முதலீட்டாளர்களுக்கு இங்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. உலகின் செழுமை இந்தியாவின் செழுமையில் உள்ளது. உலகிற்கான பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தில் உள்ளது. சிறுதானியங்கள் சூப்பர் உணவாக உருவெடுத்துள்ளன. அனைவரும் இவற்றை பயன்படுத்தி நன்மை அடைய வேண்டும்” என்றார். இந்த மாநாட்டில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஏராளமான தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.