உட்காருவதற்கு நாற்காலி கொடுங்கள்: டிடி உருக்கமான வேண்டுகோள்

பொது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் மணிக்கணக்கில் நின்று கொண்டு பேசுவார்கள். குறிப்பாக திரைப்பட விருது விழாக்கள், பாராட்டு விழாக்களில் 3 முதல் 4 மணி நேரம்கூட நின்று கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நாற்காலி கொடுங்கள் என்று நட்சத்திர தொகுப்பாளின் டிடி என்று அழைக்கப்படுகிற திவ்யதர்ஷினி கேட்டிருக்கிறார்.

சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட டிடி அதனை தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டிருந்தார். ஊன்று கோலுடன் நடப்பதாகவும் சொல்லியிருந்தார். இந்த நிலையில் தனியார் கல்லூரியில் நடந்த 'வாத்தி' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அதிக நேரம் நிற்க முடியாத காரணத்தினால், டிடிக்கு என பிரத்யேக இருக்கை போடப்பட்டது. பார்வையாளர் மட்டத்திலிருந்து பார்க்கும்போது டிடி வழக்கம்போல, நின்றபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக காணப்பட்டது. ஆனால் அமர்ந்தபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் டிடி.

இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு டிடி விழா ஏற்பாட்டாளருக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது “இம்மாதிரி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவோர் சுமார் 5 மணி நேரத்துக்கு நின்றபடி தங்களது கடமையை செய்ய வேண்டியது இருக்கிறது. இது மிகவும் சிரமம் தரக்கூடியது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இம்மாதிரி நாற்காலிகளை வழங்கினால், தொகுப்பாளர்கள் கால்வலி இன்றி உற்சாகமாக பணியாற்ற முடியும்”என்று டிடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.