ஈரோடு: அதிமுகவுக்கு ஈரோடு இடைத்தேர்தல் தக்க பாடம் புகட்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஈரோட்டில் எந்த சாலைக்கு சென்றாலும் பிரச்சனைதான். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி எந்தவொரு சாதனையையும் செய்யவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா காப்பாற்றி வைத்த அதிமுகவை பாஜகவுக்கு பழனிச்சாமி அடிமை சாசனமாக எழுதி வைத்துவிட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை ஏற்காத உதய் திட்டத்தை ஏற்றவர்தான் பழனிசாமி. தமிழ்நாடு விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டார். விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தது அதிமுக ஆட்சி. கலெக்க்ஷன், கரெப்ஷன், கமிஷன் ஆகியவற்றால்தான் அதிமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக இருந்தது. திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தது அதிமுக ஆட்சி. ஈரோடு இடைத்தேர்தல் பூகம்பத்தில் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும். எத்தனை முகமூடிகள் போட்டுகொண்டு வந்தாலும் அதிமுக இடம் தெரியாமல் போகும். அதிமுகவுக்கு ஈரோடு இடைத்தேர்தல் தக்க பாடம் புகட்டும். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் அடிப்படை தொழில்நுட்ப கோளாறுகளை அதிமுக ஆட்சி சரி செய்திருக்க வேண்டும். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் தாமதத்துக்கு அதிமுக ஆட்சியே காரணம். ஒவ்வொரு நாளும் புதிய நலத்திட்டங்களை திமுக அரசு தொடங்கி வருகிறது. அதிமுக அரசு திட்டத்தை கொண்டு வந்திருந்தாலும் திமுக அரசு அதை கைவிடவில்லை.
ஊழலின் உறைவிடமாக இருந்தது அதிமுக ஆட்சி. மாநிலத்தின் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது. 2021 அக்டோபர் நிலவரப்படி மாநில நிதிப் பற்றாக்குறை மாநில நிதிப் பற்றாக்குறை ரூ.28,108 கோடியாக இருந்தது. 2022-ல் மாநில நிதிப் பற்றாக்குறை ரூ.25,931 கோடியாக குறைந்துள்ளது. நிதி பொறுப்புணர்வு சட்டத்தை மீறி அதிமுக ஆட்சியில் கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் மீதும் அதிமுக ஆட்சி தலா ரூ.2.63 லட்சம் கடனை வைத்துவிட்டுச் சென்றுள்ளது. நிகர சந்தை கடன், நிதிப் பற்றாக்குறையை திமுக ஆட்சி குறைத்துள்ளது. திமுகவுக்கு எந்தக் காலத்திலும் தோல்வி பயம் கிடையாது இவ்வாறு கூறினார்.