கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை 1.11 லட்சமாக அதிகரிப்பு – பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு தொல்லை

கோவை: கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை 1.11 லட்சமாக அதிகரித்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கோவையில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்த அவற்றை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உக்கடம், சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் இதற்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன.

இந்நிலையில், மாநகரில் பெருகிவரும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் பின்னால் துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: டாக்ஸ் ஆஃப் கோயம்புத்தூர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் பணிக்குழுவுடன் இணைந்து, கடந்த ஆண்டு இறுதியில் மாநகர் முழுவதும் தெரு நாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

கல்லூரி மாணவர்களும் இவர்களுடன் இணைந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் போனில் உள்ள செயலியை பயன்படுத்தி நாய்களின் இருப்பிடம், வயது, பாலினம், கருச்சிதைவு, உடல்நலம் மற்றும் தோல் நிலைகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. இவர்கள் கணக்கெடுப்பை முடித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்பிடம் நேற்று அறிக்கை அளித்தனர்.

அதன்படி, வடக்கு மண்டலத்தில் 22,069, தெற்கு மண்டலத்தில் 31,499, மேற்கு மண்டலத்தில் 22,085, மத்திய மண்டலத்தில் 11,017, கிழக்கு மண்டலத்தில் 24,404 என மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 74 எண்ணிக்கையிலான தெருநாய்கள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 46,292 எண்ணிக்கையில் இருந்த தெருநாய்கள் தற்போது லட்சத்தை தாண்டியுள்ளது.

இதில் பெரும்பாலான தெரு நாய்கள் சிறந்த உடல் நிலையுடன் ஆரோக்கியமாக இருப்பதும், ஒரு சில நாய்களுக்கு தோல் நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.