வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
சினிமா என்பது மிகச் சிறந்த மீடியா.அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அபரிமிதமானது;சுனாமி போன்றது. அதனால்தான் அது கோடிகளில் புரளும் புகழ் செறிந்த துறையாகிப் போனது. அதில் நடிப்பவர்களும்,ஈடுபடுபவர்களும் புகழிலும்,பிரபலத்திலும்,பொருளாதாரத்திலும் மிக விரைவாகவே உச்சத்தைத் தொட்டு விடுகிறார்கள். மக்கள் மத்தியில் மகத்துவமும் பெற்று விடுகிறார்கள்.
ஒரு சினிமா என்பது மிகப்பெரிய கூட்டு முயற்சி. அதில் பலரின் பங்களிப்பு இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 1913 ல் பம்பாயில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற படத்தை வெளியிட்ட ‘தாதா சாகேப் பால்கே’யைத்தான் ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்றழைக்கிறார்கள். அதே போல,தமிழில் முதல் மௌனப் படமாக ஆர்.நடராஜ முதலியாரின் ‘கீசக வதம்’வெளியாயிற்று.

இரண்டு, மூன்று வருடங்களே இடைவெளி என்பதால்,ஒரு சாரார் ஒரு கான்ட்ரோவர்சியை உருவாக்கி,ராஜா ஹரிச்சந்திராவை வேண்டுமானால் முதல் மராட்டியப்படம் என்று அழைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.1903 ல் முதல் மௌனத் திரைப்படமாக வெளி வந்த’தி கிரேட் ட்ரெயின் ராப்பரி’என்பதே உலகின் முதல் படம் என்று ஒரு குழுவினரும்,’அரைவல் ஆப் ட்ரெயின்’ என்பதே முதல் படம் என்று மற்றொரு குழுவினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலகின் முதல் பேசும் படம் ‘ஜாஸ் சிங்கர்’ 1927 லும், இந்தியாவின் முதல் பேசும்படம் ‘ஆலம் ஆரா’ 1931 லும், தமிழின் முதல் பேசும்படம் ’காளிதாஸ்’ அதே ஆண்டிலும் வெளியானதாகச் செய்திகள் தெரிவித்தாலும், வேறு விதமாகக் கூறுபவர்களும் உண்டு. வேறுபாடுகளை விளக்கி விட்டு, நாம் விஷயத்திற்கு வருவோம்.

கதை,வசனம்,இசை என்ற முப்பெரும் பரிமாணத்தின் அற்புதக் கலவையே திரைப்படம். மூன்றின் கலவையும் உள்ளத்தைத் தொடும் விதத்தில் அமைந்து விட்டால் அது வெற்றிப்படமாக அமைந்து வீறு நடை போடும். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள்,பொருத்தமான நடிகர்களோடு இணைந்து விடும்போது,பொருளாதார ரீதியாகப் பின் தங்கினாலும்,மக்கள் மனத்தில் நிலை பெற்று விடுவதுண்டு. வசனம் காரணமாகவே வெற்றி பெற்ற படங்களும் உண்டு. பாடல்களால் ஓடிய படங்களும்,பாடல்கள் இன்றியே ஓடிய படங்களும் கூட உண்டு.
நல்ல வசனங்களால், நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு, தொடர்புடைய காட்சிகளை நம் உள்ளத்தில் ஒட்டி வைத்து விட்ட சில சிறந்த வசனங்களைத்தான் இங்கு நாம் நினைவு கூரப் போகிறோம். கடந்த அரை நூற்றாண்டில் நடைபெற்ற பெரும் புரட்சி இது.
நமது தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியைக் கொஞ்சம் உற்று நோக்கினால்,ஆரம்ப காலப் படங்கள் அதிகப் பாடல்களுடனும்,அதன் பிறகு நீண்ட வசனங்களுடனும் வந்தன.இப்பொழுது அந்த நிலை மாறி,கட் வசனங்களும்,பஞ்ச் வசனங்களும் கோலோச்சுவதை உணரலாம்.
‘கொண்டு வந்தால் தந்தை.
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
சீர் கேட்பாள் சகோதரி.
கொலை செய்வாள் பத்தினி.
உயிர் காப்பான் தோழன்.
‘தூக்கு தூக்கி’ படத்தின் இந்த வசனம் அந்தக் காலத்தில் அத்தனை பேருக்கும் மனப்பாடம்.

1950 ல் வெளியான மந்திரி குமாரி திரைப்படத்தில்,கதாநாயகன் பார்த்திபன் பொய் சொல்லி மந்திரிகுமாரியை மணக்க,அது தெரிய வந்ததும் மந்திரி பார்த்திபனைக் குற்றவாளி என்றழைக்க,’பார்த்திபன் என்றழையுங்கள்.விசாரணை முடிவதற்குள் குற்றவாளி என்றழைக்க எந்தச் சட்டம் கூறுகிறது?’என்ற வசனம் இன்றளவும் பொருந்துவதல்லவா?.
1954 ல் வெளி வந்த ‘மனோகரா’ பட வசனம் இன்றளவும் பிரசித்தம்.’பொறுத்தது போதும்.பொங்கி எழு.’ என்ற நான்கு வார்த்தை வசனத்திற்குத்தான் எவ்வளவு ஆற்றல்.
‘பராசக்தி’ பட வசனத்தைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. பிளாட் பாரத்தில் படுத்திருக்கும் சிவாஜியை எழுப்பிய போலீசார் சந்தேகக் கண்களுடன் ‘நீ பிக்பாக்கெட்தானே. ’என்க, ’இல்லை. எம்டி பாக்கட்’ என்பார்.அதன் பிறகு வரும் வசனங்கள் ரொம்பவும் பிரபலம்.
நீதி மன்றத்தில் வாதிடுகையில், ’உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்குமில்லாத அக்கறை?என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்.

சுய நலம் என்பீர்கள். என் சுய நலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது.ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன். அதைப்போல.
குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே.இந்தக் குற்ற வாளியின் வாழ்க்கைப் பாதையில் கொஞ்ச தூரம் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எத்தனை என்று கணக்குப் பார்க்க முடியும்.பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்.
படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன.தென்றலைத் தீண்டியதில்லை நான்.தீயைத் தாண்டியிருக்கிறேன்.’என்று அந்த வசனம் தொடர்ந்து கொண்டே போகும்.’ஓடினாள்…ஓடினாள்…ஓடினாள்…வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடி விட்டாள்.அவள் ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும்.வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்.செய்தார்களா இன்று சட்டத்தை நீட்டுவோர்?வாழ விட்டார்களா என் கல்யாணியை?’
‘பூம்புகார்’ சினிமாவில் கண்ணகி கேட்பாள்.’கள்வன்.என் கணவன் கள்வனா?அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர்.நல்லான் வகுத்ததா நீதி?வல்லான் வகுத்ததே நீதி.’
இவை அனைத்துமே சிந்தையை நிறைக்கும்,நினைவை விட்டகலா வசனங்கள்தானே.இவற்றுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்பதை ஊரும் உலகும் அறியுந்தானே.
‘ஆனந்தா. என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்.அதில ஆனந்தக் கண்ணீரைத் தவிர வேற எதையும் நான் பார்க்கக் கூடாது.
என்ற பாச மலர் அண்ணணனின் வசனம் அத்தனை திருமண வீடுகளிலும் எதிரொலித்த காலம் ஒன்றுண்டு.

‘கண்கண்ட தெய்வம்’ திரைப்படத்தில் வரும்’சின்னாண்டை எத்தனை நாளைக்கித்தான் சின்னாண்டையா இருக்குறது?பெரியாண்டை ஆக வேண்டாமா?’ என்ற வசனம் அந்தச் சமயத்தில் பல இடங்களிலும் முழங்கியதுண்டு.
‘வசந்த மாளிகை’ படத்தில், மலருக்கு மலர் தாவும் வண்டினைப்போல் சிவாஜி இளைய ஜமீனாக ஆட்டம் போட்டாலும், தனக்கென ஒரு கொள்கை உண்டென்பார். ’ வேண்டாம்.னு சொன்னா விலை மாதா இருந்தாலும் தொடக் கூடாது.’ என்பார்.
இந்த வசனத்தை மட்டும் ஒவ்வொரு ஆணும் தன் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டால், பெண்கள் யாரும் நெருப்பாற்றில் நீந்த வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும்.
இப்பொழுதும் ஒன்றும் தாமதமாகிப் போய் விடவில்லை. உலகப் பெண்கள் தினம் கொண்டாடும் நாமாவது அந்த வசனத்தை மனதில் ஏற்போமே.
இயக்குனர் சிகரம் பாலச் சந்தரின் படத்தில், காதலன் காதலியிடம், ’நீ இங்கயே இரு.நான் வந்துடறேன்.’ என்று சொல்லிச் செல்லும் காதலன் சமூக நல வேலைகளில் ஈடுபட்டு, சொன்னதையே மறந்து விட,பலமான மழை பெய்யும்.
திடீரென ஞாபகம் வந்தவனாக அவன் அவளை நிற்கச் சொன்ன இடத்திற்கு ஓடி வர,அவள் மழையில் நனைந்து,நடுங்கியபடி நிற்பாள்.’ஏன் இப்படி மழையில நனைஞ்சி நடுங்கிக்கிட்டு நிற்கறே?’என்று கேட்பவனிடம்,’நீங்கதானே இங்கயே நில்லு வந்துடறேன்ன்னு சொல்லிட்டுப் போனீங்க.அதான் நிக்கறேன்.’என்பாள். காதலின் ஆழத்தை உணர்த்த இதைவிட வேறு வார்த்தைகள் ஏதும் தேவையில்லைதானே.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ திரைப்படத்தில் எஸ்.வி.சுப்பையா மூனே மூனு வார்த்தை பேசிக்கிட பர்மிஷன் வாங்கிட்டு , எழும்பிப் போங்கடா மடையன்களா. என்பதும், சிவகுமார் தன்னைக் காதலிக்கவில்லை என்பதை அறிந்த ஶ்ரீவித்யா,16 கடிதங்களுக்கு அவர் ஒட்டிய ஸ்டாம்ப் தொகையைக் கொடுத்து விட்டு,’அத்தனை லெட்டர் கொடுத்தேனே. அதில ஒண்ணு ரெண்டைக் கூட நீங்க பிரிச்சிப் படிக்கலையா சார்?’என்று கேட்க, ’அது எப்படிம்மா. நீங்க ஒங்க தோழிக்குப் போடற லெட்டரை நான் எப்படிம்மா படிக்கிறது? அது நல்லாவா இருக்கும்?’என்று அவர் சொல்ல,’நீங்க உண்மையிலேயே ஜெண்டில் மேன் சார்.’ என்று தனது தோல்வி, சோகம் அனைத்தையும் சேர்த்துச் சொல்லும் இடத்தில் கல் நெஞ்சக் காரர்களின் கண்களும் நீர் உகுக்கும். ஏனெனில் எழுதப்பட்ட அத்தனை கடிதங்களுமே சிவகுமாருக்குத்தான்.
‘இயக்குனர் விசு’ வின் படமொன்றில் ஆச்சி மனோரமா கிழித்தெடுக்கும் வசனத்தை ஆயுளுக்கும் மறக்க இயலாதே.
‘கம்முனா கம்மு…கம்னாட்டி கோ’என்று விளாசித் தள்ளுவார்.
‘ஆண் பாவம்’ சினிமாவில்,பாலத்தின் அருகில் வந்து ‘யூ டர்ன்’எடுக்கும் கார் டிரைவர்,அங்கு நிற்கும் பாண்டிய ராஜனிடம்,’கொஞ்சம் இடிக்குதான்னு பார்த்துச் சொல்லுப்பா.’என்று சொல்லி விட்டு ரிவர்சில் வருவார்.’வரலாம்…வரலாம்…என்று சொல்லும் பாண்டிய ராஜன்,கார் நன்றாக மதகில் இடித்த பிறகு ‘இப்பதாங்க இடிச்சுது.’என்று அப்பாவி போலச் சொல்வார்.
‘பாட்ஷா’வில்,’நான் ஒரு தடவை சொன்னா…நூறு தடவை சொன்ன மாதிரி.’என்ற அசத்தல் வசனம் சிறுவர்களிடையேயும் சிறப்புப் பெற்றதல்லவா?
‘சகுனி’(2012) திரைப்படத்தில் கார்த்தியும்,சந்தானமும் பேசிக்கொள்ளும் வசனம் சிரிப்பையும்,சிந்தனையையும் தூண்டுவது.’சில்லறை இல்லைங்கறதுக்கும் காசே இல்லைங்கறதுக்கும் வித்தியாசம் நிறைய’என்பார் சந்தானம்.
உண்மைதானே.

சினிமா வசனம் என்ற சமுத்திரத்தில்,என் மனதில் பதிந்து,நினைவில் நிற்கும் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.அத்தோடு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களூரில் நாங்கள் வைத்திருந்த அமெச்சூர் நாடகக் குழுவில் நாங்கள்,’உங்கள் தீர்ப்பு’,’வாழ்க்கைச் சுழல்’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினோம்.
உங்கள் தீர்ப்பில் பட்டியலின இளைஞன் அறவாழி, பார்ப்பன குடும்ப அமுதாவைக் காதலிக்க, குடும்பத்தார் எதிர்ப்பால் அமுதா விஷமருந்தி இறந்து விடுவாள். அப்பொழுது அறவாழி பேசும் அந்த வசனம் இன்றும் பசுமையாய் எம் மனத்தில்.

‘செத்து விட்டாள் என் செங்கனி.
மாண்டு விட்டாள் என் மரகதம்.
இறந்து விட்டாள் என் இன்ப ஊற்று.
இருட்டறையில் உள்ளதடா உலகம்.
சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே.என்ற பொன்னுரைக்கு மெருகிட்ட ஏ. உதவாக்கரை உலகமே.
செய்.நன்றாகச் செய்.
இவளின் இறப்பை இன்ப விழாவாகக் கொண்டாடு.
இவளின் சாவுக்குச் சதிராட்டமாடு.
இவளின் கல்லறையைக் கட்டி அணை.
குருதிச் சேற்றைக் குடித்து மகிழ்.
வாழச் செல்ல வேண்டிய எங்களை வழி தவறச் செய்து விட்டாய்.
கட்டிலறைக்குச் செல்ல வேண்டிய எங்களைக் கல்லறைக்கே அழைத்து விட்டாய்.
காதல் கீதம் பாடி மகிழ வேண்டிய எங்களை சாதல் கீதம் பாடிக் கதறியழ வைத்து விட்டாய்.’
என்று வசனம் பேசி விட்டு அவரும் இறந்து விடுவார்.
வசனத்தை எழுதிய கதா.கணேசனும் இன்று உயிருடன் இல்லை.
வசனத்தைப் பேசி நடித்த என் மூத்த சகோதரர் பக்கிரிசாமியும் உயிருடன் இல்லை.
அவர்களின் ஆத்மாக்களை வணங்கியபடி இதனை முடிக்கிறேன்.
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.