சென்னை மெட்ரோ: ஜாக்பாட் மழையில் நனையப் போகும் Phase-1 ரயில் நிலையங்கள்!

சென்னை மாநகரின் போக்குவரத்தை விரைவாகவும், சொகுசாகவும் மாற்றும் வகையில் மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது Phase 1 திட்டத்தின் கீழ் நீல மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நீல வழித்தடத்தில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ வழித்தடத்தை நீட்டிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

அடுத்தகட்டமாக Phase 2 திட்டத்தில் ஊதா, காவி, சிவப்பு என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வரவுள்ளன. இவை வரும் 2026ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் Phase-1 திட்டத்தில் செயல்பட்டு வரும் ரயில் நிலையங்களில் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டை அதிகரித்து வருமானம் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) முடிவு செய்துள்ளது.

வர்த்தக பயன்பாடு

முன்னதாக அதிகப்படியான வாடகை, போதிய வரவேற்பு இல்லாதது போன்ற காரணங்களால் கடைகள் அல்லது அலுவலங்கள் அமைக்க யாரும் முன்வரவில்லை. ஷெனாய் நகர், ஆலந்தூர், திருமங்கலம், கோயம்பேடு, சென்ட்ரல் மெட்ரோ ஆகியவற்றில் மட்டும் வர்த்தக பயன்பாடுகள் ஓரளவு இருந்து வருகின்றன. மற்ற ரயில் நிலையங்களில் காலியிடங்கள் தான் பெருமளவு உள்ளன.

புதிய டெண்டர்

கடந்த 2019ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் வர்த்தக ரீதியில் 37.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. 2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா நெருக்கடியால் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதன்பின்னர் 2021-22ஆம் நிதியாண்டில் 35 கோடி ரூபாயாக குறைந்தது. இந்த நிலையை மாற்றி தனியார் நிறுவனங்களை ஈர்க்க மெட்ரோ நிர்வாகம் புதிதாக டெண்டர் கோரவுள்ளது.

கடைகள் அமைக்கலாம்

மொத்தம் 26 மெட்ரோ ரயில் நிலையங்களில் 11,055 சதுர மீட்டர் அளவிற்கு காலியிடம் உள்ளது. இங்கு அலுவலகங்கள், கடைகள் அமைக்கலாம். விளம்பரங்கள் செய்யலாம். வரும் மார்ச் மாதம் இதற்கான டெண்டர் கோரப்பட்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒவ்வொரு தளத்திலுள்ள இடங்களையும் வர்த்தக ரீதியில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

உரிய வாடகை

இதில் சென்னை சென்ட்ரல், வடபழனி, திருமங்கலம், உயர் நீதிமன்றம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி, ஏஜி-டிஎம்எஸ் ஆகியவற்றில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மார்க்கெட் ரேட் என்னவென்று சரியாக ஆராய்ந்து கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்திற்கு வாடகைக்கு விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் வருகை

தற்போது ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வர்த்தகப் பயன்பாடும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சரியான வகையில் கையாள வேண்டியது அவசியம் என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.