புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதனை ரூ.9 ஆயிரமாக உயர்த்தக்கோரி தொழிலாளர்களும் தொழிலாளர் அமைப்புகளும் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கியது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது.
எனினும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து அரசை வலியுறுத்தின. இதையடுத்து, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் மற்றும் பணியாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்தி வெளியானது. எனினும், இதுவரை அரசு இந்த விவகாரத்தில் முடிவு ஏதும் எடுக்கவில்லை. இந்நிலையில், இதைக் கண்டித்தும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தக்கோரியும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
விதிமுறைகள்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற ஒருவர் EPFO உறுப்பினராக இருக்க வேண்டும். குறைந்தது 10 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். முன்கூட்டியே ஓய்வூதியம் பெற 50 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். வழக்கமான ஓய்வூதியம் 58 வயதில் இருந்து தொடங்கும். 2 ஆண்டுகள் அதாவது 60 வயது வரை ஓய்வூதியம் வேண்டாம் என முடிவெடுத்தால் அதன் பிறகு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் ஆண்டுக்கு 4% உயர்த்தப்படும்.