ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவையில் பழைய பட்ஜெட் உரையை படித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் 2023-24ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை முதல்வர் அசோக் கெலாட் நேற்று காலை தாக்கல் செய் தார். அப்போது, அமைச்சர்கள் சிலர், முதல்வர் வாசித்து கொண்டிருந்தது பழைய நிதிநிலை அறிக்கை என்பதை கவனித்தனர். உடனே அதை முதல்வரிடம் தெரிவிக்க, அசோக் கெலாட் உரை வாசிப்பை நிறுத்திக் கொண்டார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அசோக் கெலாட்டின் இந்த பொறுப்பற்ற தன்மையை கண்டித்து அவையின் மையப்பகுதியில் பாஜ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், தர்ணா செய்தனர்.
பாஜ தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, “இந்த பட்ஜெட் கசித்து விட்டது. அதனால் இதை தாக்கல் செய்ய முடியாது” என்றார். அவை ஒத்தி வைக்கப்பட்டு, சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் கூடியது. அப்போது பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல்வர் அசோக் கெலாட், “என் கையில் உள்ள பட்ஜெட் உரைக்கும், உங்களுக்கு தரப்பட்ட பட்ஜெட் உரைக்கும் வேறுபாடுகள் இருந்தால் நீங்கள் சுட்டிகாட்டுங்கள். பட்ஜெட் கசித்து விட்டது என்று எப்படி கூற முடியும். என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் தவறுதலாக பழைய பட்ஜெட் உரையின் சில பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. இது மனித தவறு என்றாலும், நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று கூறினார்.